வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்றைய தலைமுறையின் அவசர முடிவு ......

இன்றைய   காலகட்டத்தில்   சிறுவர்,  சிறுமிகளும்   , மாணவச்  செல்வங்களும்   தற்கொலை   செய்து கொள்வது   அதிகரித்து  உள்ளது.  மாடியிலிருந்து  குதிப்பதும் , மண்ணெண்ணெய்   ஊற்றி   தீ  வைத்துக்கொள்வது   அதிகமாக  உள்ளது. இதெல்லாம்  பார்க்கும்  போது  எங்கே  செல்கிறது  நம்  வருங்கால சந்ததியினரின்  பாதை  என்ற எண்ணம்  எனக்குத் தோன்றியது. ஏன்   இந்த  அவசர முடிவு ?   எது  அவர்களை  இந்த பாதைக்கு  தூண்டியது?

இளைய   தலைமுறையினரின்   இந்த   அவசர  முடிவு  மிகவும்   வருந்தத்தக்க ,  கவனிக்கப்பட  வேண்டிய   விஷயமாகிவிட்டது.   எதையும்   தாங்கக்  கூடிய  மனப்பக்குவமும் ,  தைரியமும்    இல்லாததே   இவர்களின் இந்த அவசர   முடிவுக்கு  காரணம்  என்பது   மட்டும்  புரிகிறது.

போன   தலைமுறையிடம்   இருந்த  பக்குவம், தைரியம்   போன்றவை   இப்போது   இல்லை  என்று   தான்  சொல்ல வேண்டும்.  உடனுக்குடன்   உணர்ச்சி    வசப்படுவதும் , எதற்கு   எடுத்தாலும்   கோபப்  படுவது  என்று   இவர்களின்  இந்த போக்கு  ஒரு  வித  அச்சத்தை   உண்டு  பண்ணுகிறது.

இன்றைய   நடைமுறை   வாழ்க்கையில்   பார்க்கும்  போது , பெரும்பாலான   குடும்பங்களில்   பெற்றோரும்  ,  குழந்தைகளும்   தனித்து   உள்ளார்கள்.  கூட்டுக்  குடும்பமாக   இருப்பதில்லை.  அதோடு   பெற்றோர்   இருவரும்  வேலைக்கு   செல்லும்  பட்சத்தில்   அந்தக்   குழந்தை   தனிமையில்   இருக்கும்   சந்தர்ப்பம்   அதிகம்  உள்ளது.  எனவே   அக்குழந்தை   தொலைக்காட்சியின்    துணையை   நாடுவதால் ,  அதன்  மூலம்  அக்குழந்தையின்   மனதில்  விதவிதமான  எண்ணங்கள்   உருவாகிறது.   அது  அந்த  குழந்தையின்  மனதில் ஒரு  சில   நல்ல  விஷயங்களை   பதித்தாலும்   பெரும்பாலான  நேரங்களில்  விஷ  விதைகளைத்   தூவுகிறது.

அது   மட்டும்   இல்லாமல்    இப்போது  அநேக   இல்லங்களில்  பெற்றோர்  இருவரும்  வேலைக்கு  செல்கிறார்கள்.  எனவே   பொருளாதாரப்   பற்றாக்குறை  என்பது   இப்போது  அனேக  வீடுகளில் அதிகம்  இருப்பதில்லை.  பெரும்பாலும்  ஒரு  குடும்பத்தில்  ஒன்று  அல்லது  இரண்டு   குழந்தைகள்   தான்  உள்ளன.   அப்படி  இருக்கும்   பட்சத்தில்  அந்த குழந்தை  தனக்கு   தேவை  என்று  நினைக்கும்  ஒரு பொருள் , அதற்கு   கேட்பதற்கு   முன்பே   கிடைத்து விடுகிறது. முந்தைய   நாட்களில்    அனேக  வீடுகளில்   குறைந்தது  மூன்று  அல்லது  நான்கு  குழந்தைகள்  இருக்கும்.  வருமானமும்   கம்மியாக   இருந்ததால்   அக்குழந்தைகள்  கேட்கும்   அனைத்தும்   கிடைப்பதில்லை .  எனவே   அதற்கு  இல்லை, கிடையாது  என்ற  வார்த்தைகள்   பழகிப்  போன ஒன்றாக   இருந்தது.
ஆனால்   தற்போது   எல்லாமே   உடனுக்குடன்  கிடைப்பதால்  அக்குழந்தைகள்   சற்றே  வளர்ந்த பின்  இல்லை   என்ற  வார்த்தையை   விரும்புவதில்லை .   அப்படி  இருப்பதால்  எந்த  ஒரு  சிறு  ஏமாற்றத்தையும்   அதற்கு  தாங்கும் சக்தி  இல்லாமல்   போய்  விடுகிறது.  இதுவே   அவர்களின்   வாழ்க்கையை   திசை  திருப்பி   தற்கொலை   என்ற   அவசர   முடிவுக்கு   அவர்களை  தள்ளுகிறது.

எனவே   பெற்றோர்களே !    தயவு   செய்து   குழந்தைகளுக்கு    எதையுமே   கேட்டவுடன்   வாங்கி  கொடுப்பதை   நிறுத்துங்கள்.    அவர்களுக்கு   சற்றே  கசப்பையும்   காட்டுங்கள். வாழ்க்கை   என்பது  இன்பம், துன்பம்   இரண்டும்   நிறைந்தது  என்பது  நம்   கண்மணிகளுக்கு   தெரிய  வேண்டும்.  அதை  சரியான   விதத்தில்  புரிய  வைக்க  வேண்டிய  மிகப்  பெரிய கடமை  பெற்றோர்களாகிய   நம்   கையில்  தான்   உள்ளது.  இன்றே   செயல்படுத்தலாமா !!!!!!  

10 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

ம்ம்.. கேள்வி எதுக்கு? தாராளமா ஆரம்பிக்க வேண்டியதுதானே?

வெ.இராதாகிருஷ்ணன் சொன்னது…

நம்மால் வாங்கித்தர முயன்றால் வாங்கித்தருவதில் பிரச்சினை இல்லை, குழந்தைகள் நமது பொருளாதாரத்தை அறியும் வண்ணம் வாழ்வதுதான் சிறப்பு.

எவ்வளவு விலை என பொருளைப் பார்த்துத்தான் என்னிடம் வாங்கச் சொல்வான், அதிக விலை எனில் அதிக விலை ஆதலால் வேண்டாம் என்றே சொல்லிவிடுவேன்.

பல நேரங்களில் எனது கவலையெல்லாம் பிற குழந்தைகளைப் பற்றியே இருக்கும்.

அதென்ன பெற்றோர்களே, இது எல்லாருக்கும் தான். நாம் மட்டும் எப்படி இருக்கிறோமாம்?

நல்லதொரு பதிவு.

malarvizhi சொன்னது…

வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி. வாங்கி தர முடிந்தாலும் நாம் சிறிது கண்டிப்பாக இருக்கலாம் என்று தான் சொல்கிறேன். கேட்டவுடன் கிடைத்தால் அதில் சுகம் கிடையாது. காத்திருந்து பின்பு கிடைக்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது. நான் என் கருத்துக்கள் படி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நான் சந்தித்த பல குடும்பங்களில் நடந்தவற்றை பார்த்ததால் உருவானது தான் இந்த பதிவு.

Sangkavi சொன்னது…

செயல் படுத்த வேண்டும் அப்ப தான் நம்ம குழந்தையை சந்தோஷமாக வைத்திருக்க முடியும்...

தமிழ் உதயம் சொன்னது…

நாகரீகத்திற்கு நாம் கொடுத்த விலை இது.

SUFFIX சொன்னது…

சரியாக சொன்னீர்கள், தொலைக்காட்சிகள் சேனல்களின் எண்ணிக்கை பெருகியது போல இவர்க்ளின் பொறுப்பற்ற செயல்களும் பெருகி விட்டது.

குழந்தைகளை சிறுவயது முதல் சிறு சுதந்திரம்+கட்டுப்பாடு என சமன் செய்து வளர்த்து விட்டால், இல்லை தொல்லை!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்லதொரு கருத்து மலர்விழியக்கா அருமை..

தாராபுரத்தான் சொன்னது…

நன்றியம்மா.இப்படிபட்ட கருத்தை அடிக்கடி ஞாபக படுத்த வேண்டியதாகி விடுகிறது.

malarvizhi சொன்னது…

நன்றி , சங்கவி . உங்கள் முயற்சியை இன்றே ஆரம்பியுங்கள்.

நன்றி தமிழ் .

மிக்க நன்றி ஷஃபி.

நன்றி மலிக்கா.

வருகைக்கும் , கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தாராபுரதான் அவர்களுக்கு.

மேரிஜோசப் சொன்னது…

ஒருசிலர் சில தற்கொலையை நியாயப்படுத்துகின்றனர். எந்த காரணத்திற்காக செய்தாலும் தற்கொலை என்பது தவறானதே. அதைவிட அதே நபர் வாழ்ந்து ஒருவருக்காவது உதவி புரிந்தால் அவர் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியிருக்கும் என்பது என் கருத்து.

Pit