ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....தமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே.அவர்களை சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் ,சங்க காலச் சோழர்,பிற்காலச் சோழர் என்று மூன்று வகையினராக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்து உள்ளனர்.


சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்

சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள் பற்றி கலிங்கத்துபரணி,மூவருலா,மற்றும் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மனு, சிபி இவர்களின்  சரித்திர செய்திகள் சங்க நூல்களில் உள்ளன.
இவர்களை தொடர்ந்து ககுத்தன்,துந்துமாறன்,முசுகுந்தன்,வல்லபன்,துஷ்யந்தன்,பரதன்,வீரசேனன்,சித்ராசுரன்,என்று மேலும் பலர் ஆண்ட இம்மண்ணில் கவேரன் என்பவன் காவிரியின் ஓட்டத்தை சோழ மண்ணிற்கு உருவாக்கி கொடுத்தவன்.
இவர்களுக்கு பின் புலிகேசி,சமுத்ரஜித் ,வசு,பெருநற்கிள்ளி,மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்டமண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன்.இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன்.காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன்.இவன் காலம் கி. மு. 260  - 220 .
இவனை தொடர்ந்து கோச்செங்கணான்,கிள்ளிவளவன் ,மணிமுடிசோழன்,மற்றும் பலர் ஆண்டனர்.

சங்ககாலச் சோழர்கள்

இவர்களுள் கிள்ளிவளவன்,கோப்பெரும்  சோழன்,நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி,சோழன் செங்கணான், ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களாக விளங்கினர். சங்ககால சோழர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக தெரிகிறது.

கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை  பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது.குறிப்பாக கி.பி 250  முதல் கி.பி. 575  வரை உள்ள 300  ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர்.அக்காலகட்டத்தில்  வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் ,அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர்.களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர்.
சோழர்கள் களப்பிரர்களாலும் ,பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. 

சனி, 5 பிப்ரவரி, 2011

ஊழல் இடையே நான் கண்ட நேர்மை....

ஊழல்,திருட்டு,பொய்,பிறர் சொத்தை அபகரித்தல் ,இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு செய்தி நம் காதுக்கு வருகிறது.குறிப்பாக ஊழல்.இவையெல்லாம் என்ன என்றே தெரியாமல் அறியா பருவத்தில் நேர்மை ,ஒழுக்கம் இவற்றை மட்டும் பள்ளிகளில் கற்று வரும் நாம் வெளியே வந்ததும் ,நம்மை வழி நடத்தும் இந்த சமுதாயம் இதற்கு எதிர்மறையாக உள்ளது என்பதை தெரிந்து கொள்கிறோம்.
ஊழல்,ஊழல்,ஊழல்.......
முன்பெல்லாம் முறையற்ற வகையில் காரியம் நடக்க லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது.ஆனால் இப்போது நமது காரியம் சரியான முறையில் நடைபெறவேண்டும் என்றால் அதற்கும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நியதி உருவாகி விட்டது.
ஒரு சாதாரண வேலையில் இருக்கும் அலுவலர் லஞ்சம் வாங்கினால் ,அவரை உடனே கைது செய்யும் நம் நாட்டு சட்டம் ,பல கோடிகளை சுருட்டுபவர்களை விட்டு விடுகிறது.ஒரு நாடு  நன்றாக இருக்க ,தலைமை நன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
அதுவே சரியில்லை என்றால் நாடு எங்ஙனம் சிறக்கும்?
நேர்மை என்றால் என்ன என்று கேட்கும் நிலை இன்று உருவாகி விட்டது.நேர்மையான தொழிலாளியையும் ,அதிகாரியையும் இன்று காண்பது மிகவும் அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த நம் தமிழகத்தில், தன் பணியில் சிறிதும் நேர்மை தவறாத ,'என் கடன் பணி செய்து கிடப்பதே 'என்ற வரிகளுக்கு சரியான உதாரணமாய் வாழ்ந்த,இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ,நான் சந்தித்த ஒரு ஓய்வு பெற்ற பெரியவரை பற்றி சில வரிகள் பகிர விரும்புகிறேன்.மின்சார வாரிய பொறியாளரான அவர் வேறு ஒரு நகரத்திற்கு ,மாறுதல் பெற்று அவ்வூரின் நகராட்சி பொறியாளராக சிறப்பு நியமனத்தில் மூன்று வருடம் பணி செய்ய வந்தார்.அதுவரை லஞ்சத்தில் ஊறி கிடந்த அந்த நகராட்சிக்கு புதிய பொறுப்பில் வந்த நம் பெரியவரை மரியாதை நிமித்தம் சந்திக்க 'அன்பளிப்புடன்' வந்த ஊர் பெரியமனிதர்களும்,அரசியல்புள்ளிகளும் ,அவர் கண்டிப்புடன் மறுத்ததை அதிசயமாக பார்த்து திரும்பினர்.
அதன்பிறகு துரிதகதியில் அவர் செயல்பட்ட விதம் காரணமாக ஒரே ஆண்டில் அவ்வூரில் நிலுவையில் இருந்த அனைத்து மின்வேலைகளும் முடிவு பெற்று ,ஒரு கட்டத்தில் அந்நகரில் அனைத்து தெருவிளக்குகளும் எரியும் நிலையை உருவாக்கினார்.புது இணைப்பு வாங்குபவர்கள் வரிசைப்படி மிகவும் விரைவாக இணைப்பு பெற்றனர் எந்த வித செலவும் (லஞ்சம்) இல்லாமல்.கட்சி பாகுபாடு இன்றி அவர் செயல்பட்டதால் ,அவருடைய மூன்று வருட பணி முடிந்த போது மேலும் இரண்டு வருடம் பணி நீடிப்பு கிடைத்தது.எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் அவர்கள் குறையை உடனே நீக்கிவிடுவார்.
ஆனால் அந்த ஐந்து வருட காலத்தில் அவர் சந்தித்த தொல்லைகள் ஏராளம்.கொலை மிரட்டல் கடிதங்கள் பல வந்தன.அவர் பெண்களை கடத்தி விற்க்கபோவதாகவும்,அவரை மணல் லாரி ஏற்றி கொள்ளபோவதாகவும் தொல்லை கொடுத்தனர்.இரவில் நடக்கும் மின்சார திருட்டுகளை கண்டு பிடித்து ஒழித்தால் பல பெரும்புள்ளிகளுடன் பகை வளர்ந்தாலும் ,நியாயமான முறையில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கி அவர்களின் அன்பையும் பெற்றார்.
இன்றும் அவருடைய ஐந்து ஆண்டு கால பணியை 'பொற்காலம்' என்று கூறி புகழும் பலரை நான் காண்கிறேன்.இன்றும் அவரை அவ்வூரில் உள்ள மக்கள்  நல்ல மரியாதை கொடுத்து அன்புடன் நடத்துகின்றனர். 
இவ்வளவு நேர்மையுடன் எந்தவித பயமும் இல்லாமல் ,மிகவும் துணிச்சலுடன் பணியாற்றிய அவரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை.
இப்படி பட்டவர்களை ஊக்கப்படுத்தினால் தானே நாமும் நேர்மையுடன் பணி செய்யலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்.ஊழல் நிறைந்த இந்த உலகில் நேர்மைக்கு ஏது மதிப்பு.....

Pit