சனி, 5 நவம்பர், 2011

 
அன்பு..
 
 
 
 
 எல்லோருக்கும் பிடித்த ,எல்லோரையும் கவரக்கூடிய ஒரு அற்புதமான உணர்வு....அன்பான வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் வெகு விரைவில் எதிராளியிடம் ஐக்கியமாக முடியும்.அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம்,காதல் ,நேசம்,,கருணை இப்படி பல பரிணாமங்கள் உள்ளது.
அனைத்து விதமான உணர்வுகளிலும் தலை சிறந்தது அடுத்தவர்கள் மேல் நாம் காட்டும் பரிவு தான்...அன்பு என்பது மகிழ்ச்சியாக
இருப்பது மட்டும் கிடையாது..அது... ஆழமான அதே சமயத்தில் அழகான வலியும் கூட...
அன்பு நிறைந்த உள்ளத்தில் பொறாமை இருப்பதில்லை.இறுமாப்பு இருக்காது..சினம் கொள்ளாது.அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காது.சாந்தம் குடியிருக்கும்.அன்பை வெளிபடுத்தும் இதயத்திற்கு ஏழை ,பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க தெரியாது.
அ‌ன்பு அனை‌த்தையு‌ம் பொறு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம், அ‌ன்பு அனை‌த்தையு‌ம் ந‌ம்பு‌ம், அ‌ன்பு எத‌ற்கு‌ம் அடிப‌ணியு‌ம்.எதையும் அன்புடன் கூறும் போது,அதற்கு நல்ல பலன் இருக்கும்..அன்பு செய்வோம் .........:):):)

வியாழன், 3 நவம்பர், 2011

கண்ணீர்...
 
 
 
  கண்ணீர் பெரும்பாலும் நம் வேதனைகளையும் ,வலியையும் வெளிபடுத்துவதன் அறிகுறி என நினைக்கிறோம்.ஆனால் எந்த ஒரு உணர்வு அதிகமானாலும் கண்களில் கண்ணீர் வரும் என்பதை பலரும் அறிவதில்லை...
நம் வாழ்வில்  , வலியை மட்டுமே அதிகமாக உணர்வதால் ,நாம் கண்ணீரை அதனுடன் பிணைத்து  விடுகிறோம்.ஆனால் மனம் மிகவும் அமைதியாகவோ அல்லது ஆனந்தமாகவோ இருக்கும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதை நம்...மில் பலரும் அறிந்திருக்கவில்லை. அன்பு, ஆனந்தம் ,அமைதி இவற்றின் மூலம் கண்களில் கண்ணீர் வந்து ,அதை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால் வாழ்வின் ரகசியத்தை  இன்னும் முழுமையாக உணர வில்லை என்றே எனக்கு நினைக்க தோன்றுகிறது. அப்படி அனுபவிக்கும் பட்சத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் அதை தடுக்க முயலாதீர்கள் ...அனுபவியுங்கள் அந்த கண்ணீரை......ஆனந்தத்துடன்.......:):):)

செவ்வாய், 14 ஜூன், 2011

தஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்


ராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெரியகோயில் கட்ட பயன்படுத்தி இருக்க வேண்டும்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
தஞ்சைக்கு தெற்கு ,தென்மேற்குத் திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும்,வாய்க்கால்களாலும் சூழப்பட்டுள்ளன.எனவே அந்த திசைகளின் வழியாக மிகவும் கனமான பெரிய கற்பாறைகளை கொண்டு வருவது கடினமான காரியம் ஆகும்.தஞ்சையை விட சற்று உயரமான தென்மேற்கு திசைப்பகுதியே போக்குவரத்துக்கு ஏற்ற நில அமைப்பு கொண்டது.மேலும் தஞ்சைக்கு மிக அருகில் கற்பாறைகள் கிடைக்கும் இடமும் இந்த பகுதி தான்.
இரண்டாவது காரணம்......


தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் பாறைகள் எந்தவகையை சேர்ந்ததோ அதே வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்துக் குன்னாண்டார்கோயில் பகுதி ஆகும்.
கற்களே இல்லாத ஓர் இடத்திற்கு பல்லாயிரக்கணக்கான டன்கள் எடையுடைய கற்களை ,ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வந்து கட்டியுள்ளனர்.அக்காலத்தில் எந்த ஒரு தொழில் நுட்ப வசதிகளும் இல்லாதபோதும் பிரம்மாண்டமான பாறைகளை கொண்டு வந்தது மகத்தான சாதனையே.

இந்த தகவல் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் 'இராஜராஜேச்சரம்' புத்தகத்தில் உள்ளது.
இதே போன்று விஜயநகர பேரரசு காலத்தில் 18 ' நீளமும்,8 ' அகலமும் ,12 ' உயரமும் உடைய நந்தியை வைத்ததும் மிகப் பெரிய சாதனையே.இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கி.பி. 750 இல் சோழ நாட்டில் நந்திபுரத்து ஆயிரத்தளி என்னும் ஊரில் ஆயிரம் லிங்கங்களை பிரதிட்டை செய்து ஓர் ஆலயம் கட்டினான்.பின்பு அந்த ஆலயம் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.அழிக்கப்பட்ட அந்த ஆலயம் இருந்த பண்டைய நந்திபுரம் என்னும் பேரூர் தற்போது தஞ்சைக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை,செங்கமேடு,இரட்டைக்கோயில்,ஆவிக்கரை என்னும் சிற்றூர்களாக மாறி விட்டன.
இரண்டாம் சரபோஜி மன்னர் வீரசிங்கம் பேட்டையிலிருந்து புதையுண்டு கிடந்த 108 சிவலிங்கங்களை எடுத்து வந்து 1801 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாளில் தஞ்சை கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பிரதிட்டை செய்தார்.

.பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப் பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல் மாலிக்கபூரின் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை காண முடியவில்லை . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்பது வரலாற்று உண்மை .

ராஜராஜன் இலங்கையை முழுதும் வென்றான்.அதனால் அவனுக்கு 'சிங்களாந்தகன்' என்ற பெயர் உண்டு.இலங்கைக்கு  மும்முடி சோழமண்டலம் என்று பெயரிட்டான்.தஞ்சை பெரியகோயில் வழிபாட்டிற்கு இலங்கையிலும் நிலம் கொடுக்கப்பட்டது.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....தமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே.அவர்களை சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் ,சங்க காலச் சோழர்,பிற்காலச் சோழர் என்று மூன்று வகையினராக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்து உள்ளனர்.


சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்

சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள் பற்றி கலிங்கத்துபரணி,மூவருலா,மற்றும் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மனு, சிபி இவர்களின்  சரித்திர செய்திகள் சங்க நூல்களில் உள்ளன.
இவர்களை தொடர்ந்து ககுத்தன்,துந்துமாறன்,முசுகுந்தன்,வல்லபன்,துஷ்யந்தன்,பரதன்,வீரசேனன்,சித்ராசுரன்,என்று மேலும் பலர் ஆண்ட இம்மண்ணில் கவேரன் என்பவன் காவிரியின் ஓட்டத்தை சோழ மண்ணிற்கு உருவாக்கி கொடுத்தவன்.
இவர்களுக்கு பின் புலிகேசி,சமுத்ரஜித் ,வசு,பெருநற்கிள்ளி,மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்டமண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன்.இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன்.காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன்.இவன் காலம் கி. மு. 260  - 220 .
இவனை தொடர்ந்து கோச்செங்கணான்,கிள்ளிவளவன் ,மணிமுடிசோழன்,மற்றும் பலர் ஆண்டனர்.

சங்ககாலச் சோழர்கள்

இவர்களுள் கிள்ளிவளவன்,கோப்பெரும்  சோழன்,நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி,சோழன் செங்கணான், ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களாக விளங்கினர். சங்ககால சோழர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக தெரிகிறது.

கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை  பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது.குறிப்பாக கி.பி 250  முதல் கி.பி. 575  வரை உள்ள 300  ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர்.அக்காலகட்டத்தில்  வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் ,அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர்.களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர்.
சோழர்கள் களப்பிரர்களாலும் ,பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. 

சனி, 5 பிப்ரவரி, 2011

ஊழல் இடையே நான் கண்ட நேர்மை....

ஊழல்,திருட்டு,பொய்,பிறர் சொத்தை அபகரித்தல் ,இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு செய்தி நம் காதுக்கு வருகிறது.குறிப்பாக ஊழல்.இவையெல்லாம் என்ன என்றே தெரியாமல் அறியா பருவத்தில் நேர்மை ,ஒழுக்கம் இவற்றை மட்டும் பள்ளிகளில் கற்று வரும் நாம் வெளியே வந்ததும் ,நம்மை வழி நடத்தும் இந்த சமுதாயம் இதற்கு எதிர்மறையாக உள்ளது என்பதை தெரிந்து கொள்கிறோம்.
ஊழல்,ஊழல்,ஊழல்.......
முன்பெல்லாம் முறையற்ற வகையில் காரியம் நடக்க லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது.ஆனால் இப்போது நமது காரியம் சரியான முறையில் நடைபெறவேண்டும் என்றால் அதற்கும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நியதி உருவாகி விட்டது.
ஒரு சாதாரண வேலையில் இருக்கும் அலுவலர் லஞ்சம் வாங்கினால் ,அவரை உடனே கைது செய்யும் நம் நாட்டு சட்டம் ,பல கோடிகளை சுருட்டுபவர்களை விட்டு விடுகிறது.ஒரு நாடு  நன்றாக இருக்க ,தலைமை நன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
அதுவே சரியில்லை என்றால் நாடு எங்ஙனம் சிறக்கும்?
நேர்மை என்றால் என்ன என்று கேட்கும் நிலை இன்று உருவாகி விட்டது.நேர்மையான தொழிலாளியையும் ,அதிகாரியையும் இன்று காண்பது மிகவும் அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த நம் தமிழகத்தில், தன் பணியில் சிறிதும் நேர்மை தவறாத ,'என் கடன் பணி செய்து கிடப்பதே 'என்ற வரிகளுக்கு சரியான உதாரணமாய் வாழ்ந்த,இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ,நான் சந்தித்த ஒரு ஓய்வு பெற்ற பெரியவரை பற்றி சில வரிகள் பகிர விரும்புகிறேன்.மின்சார வாரிய பொறியாளரான அவர் வேறு ஒரு நகரத்திற்கு ,மாறுதல் பெற்று அவ்வூரின் நகராட்சி பொறியாளராக சிறப்பு நியமனத்தில் மூன்று வருடம் பணி செய்ய வந்தார்.அதுவரை லஞ்சத்தில் ஊறி கிடந்த அந்த நகராட்சிக்கு புதிய பொறுப்பில் வந்த நம் பெரியவரை மரியாதை நிமித்தம் சந்திக்க 'அன்பளிப்புடன்' வந்த ஊர் பெரியமனிதர்களும்,அரசியல்புள்ளிகளும் ,அவர் கண்டிப்புடன் மறுத்ததை அதிசயமாக பார்த்து திரும்பினர்.
அதன்பிறகு துரிதகதியில் அவர் செயல்பட்ட விதம் காரணமாக ஒரே ஆண்டில் அவ்வூரில் நிலுவையில் இருந்த அனைத்து மின்வேலைகளும் முடிவு பெற்று ,ஒரு கட்டத்தில் அந்நகரில் அனைத்து தெருவிளக்குகளும் எரியும் நிலையை உருவாக்கினார்.புது இணைப்பு வாங்குபவர்கள் வரிசைப்படி மிகவும் விரைவாக இணைப்பு பெற்றனர் எந்த வித செலவும் (லஞ்சம்) இல்லாமல்.கட்சி பாகுபாடு இன்றி அவர் செயல்பட்டதால் ,அவருடைய மூன்று வருட பணி முடிந்த போது மேலும் இரண்டு வருடம் பணி நீடிப்பு கிடைத்தது.எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் அவர்கள் குறையை உடனே நீக்கிவிடுவார்.
ஆனால் அந்த ஐந்து வருட காலத்தில் அவர் சந்தித்த தொல்லைகள் ஏராளம்.கொலை மிரட்டல் கடிதங்கள் பல வந்தன.அவர் பெண்களை கடத்தி விற்க்கபோவதாகவும்,அவரை மணல் லாரி ஏற்றி கொள்ளபோவதாகவும் தொல்லை கொடுத்தனர்.இரவில் நடக்கும் மின்சார திருட்டுகளை கண்டு பிடித்து ஒழித்தால் பல பெரும்புள்ளிகளுடன் பகை வளர்ந்தாலும் ,நியாயமான முறையில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கி அவர்களின் அன்பையும் பெற்றார்.
இன்றும் அவருடைய ஐந்து ஆண்டு கால பணியை 'பொற்காலம்' என்று கூறி புகழும் பலரை நான் காண்கிறேன்.இன்றும் அவரை அவ்வூரில் உள்ள மக்கள்  நல்ல மரியாதை கொடுத்து அன்புடன் நடத்துகின்றனர். 
இவ்வளவு நேர்மையுடன் எந்தவித பயமும் இல்லாமல் ,மிகவும் துணிச்சலுடன் பணியாற்றிய அவரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை.
இப்படி பட்டவர்களை ஊக்கப்படுத்தினால் தானே நாமும் நேர்மையுடன் பணி செய்யலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்.ஊழல் நிறைந்த இந்த உலகில் நேர்மைக்கு ஏது மதிப்பு.....

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மூணாறு
தமிழகத்திற்கு அருகில் கேரளாவை சேர்ந்த மூணாறு, தேயிலை தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் மிகவும் அழகிய நகரம்.  பச்சை போர்வை போர்த்தியது போல் தோன்றும் அழகிய தேயிலை தோட்டங்களும், கண்களை கவரும் பசுமை நிறைந்த மரங்களும் ,வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையும் கண்கொள்ளா காட்சி.
தமிழ்நாடு ,கேரளா எல்லையில் அமைந்துள்ள இந்த அழகிய மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.தமிழகத்தில் போடிநாயக்கனூர் என்ற ஊரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.போடிமெட்டு என்ற இடத்தில தமிழக ,கேரளா எல்லை இருக்கிறது.
மூணாறில் பார்க்கவேண்டிய சில இடங்கள் , மாட்டுப்பட்டி அணை ,  ராஜமலை (இங்கு அபூர்வ வகை மலை ஆடுகளை காணலாம்), ஆனைமுடி ,கொளுக்குமலை தேயிலை தோட்டம்.
கொளுக்குமலை கடல் மட்டத்திலிருந்து 2175 மீட்டர் ( 7150 அடி ) உயரத்தில் உள்ள மிகவும் அழகிய இடம் .வழிநெடுகிலும் தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்த மலை உச்சியை அடைய தனியாருக்கு சொந்தமான ஜீப்புகள் உள்ளன.மிகவும் கரடுமுரடான அந்த பாதையில் ஜீப்புகளில் தான் பயணிக்க முடியும்.அதிகாலை 4 .30 மணிக்கு புறபட்டால் ஒருமணி நேரத்தில் அந்த இடத்தை அடையலாம்.5 .30 முதல் 7.30  வரை   அங்கே  காத்திருந்தால் ஆறு மணியளவில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம்.மூடுபனி இல்லாமல் தெளிவாக இருந்தால் இது ஒரு அற்புதமான அனுபவம்.இந்த மலை தான் உலகிலேயே உயரமான தேயிலை தோட்டம் அமைந்த மலை.இதன் ஒருபுறம் தேனி,கம்பமும் ,மறுபுறத்தில் கேரளாவையும் காணலாம்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

தஞ்சை பெரிய கோயில் - சில தகவல்கள்...


கி .பி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த போது நிசும்பசூதனி என்ற தேவி கோயில் ஒன்றினை தோற்றுவித்தான்.அவன் எடுத்த திருமேனி தற்போது தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வடபத்ரகாளிகோயில் என்னும் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் திகழ்கின்றது.
தஞ்சையில் சோழர் ஆட்சி மலர்ந்த போதே இத்தேவியின் கோயிலும் எழுந்ததாக வரலாறு கூறுகிறது.


பெரியகோவிலை சுற்றியுள்ள திருமதில் ராஜராஜனின் சேனாதிபதி கிருஷ்ணன் ராமனால் கட்டப்பட்டது.
கோயில்,கீழே இரண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு அதன் மீது உயரமாக அமைக்கப்பட்டது.இரு சுவர்களின் இடைவெளியில் இரண்டு அடுக்குகளில் நாம் நடந்து செல்லலாம்.ஒன்றில் நாட்டிய கரணச் சிற்பங்களும் ,மற்றொன்றில் ஓவியங்களும் உள்ளன.

ராஜராஜனின் ஆட்சிப் பரப்பு சோழ நாடு,பாண்டிநாடு,தொண்டைநாடு,கொங்குநாடு,சேரநாடு என்று தமிழ்நாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்ததோடு, குடமலைநாடு (குடகு பகுதி),கங்கபாடி (கர்நாடகத்தின் தென்பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தை ஒட்டிய பகுதி), நுளம்பபாடி(கர்நாடகத்தின் ஒரு பகுதி மற்றும் ஆந்திரத்தின் பெல்லாரி மாவட்டம்),தடிகைபாடி (மைசூர் பகுதி),வேங்கைநாடு (கிருஷ்ணா கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட சாளுக்கியநாடு ), கலிங்க நாடு (ஒரிஸ்ஸா ),சித்புலிநாடு (நெல்லூர் பகுதி ),பழந்தீவு பன்னீராயிரம் (சேர நாட்டிற்கு தென் மேற்கே அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகள்), ஈழத்தில் ஒரு பகுதி ஆகிய நாடுகளிலும் பரவி இருந்தது.

ராஜராஜன் தஞ்சை பெரிய கோயில் இறைவனுக்குத் தண்ணீரைக் கொட்டுவதுபோல் , இலட்சக்கணக்கான முத்துக்களைக் கொட்டி வழிபட்டான் .அவை சத்யாசிரியனையும் ,பாண்டியரையும்,சேரரையும் வெற்றி கண்டு கொண்டுவந்தவை.

வியாழன், 13 ஜனவரி, 2011

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ,அனைவருக்கும்  என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Pit