புதன், 22 டிசம்பர், 2010

ஆருத்ரா தரிசன விழா
பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

பூலோக கைலாசம் என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் மூலவரே சபையை விட்டு வெளியில் வந்து அன்னை சிவகாமியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் .இந்த அற்புதமான காட்சியை வேறு எங்கும் காணமுடியாத ஓர் அறிய காட்சி ஆகும்.தேர் நான்கு வீதிகளையும் வலம்வந்து முடிந்ததும் மாலை ஏழு மணிக்கு பிறகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ மூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர்.
மறுநாள் , அதாவது திருவாதிரை நட்சத்திரத்தன்று அதிகாலையில் மகா அபிஷேகமும் ,அதன் பிறகு ஆபரண அலங்காரமும் , லட்ச்சார்ச்சனையும் நடைபெறும்.அன்று மதியம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.
தங்க ,வைர  ஆபரணங்கள் ஜொலிக்க ,அலங்காரம் செய்யப்பட்ட நடராஜ மூர்த்தியும்,சிவகாமி அம்மையும் வாத்திய கோஷங்களும்,வேத மந்திரங்களும் ஓத ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து முன்னும் ,பின்னுமாக ஆனந்த நடனமிட்ட வண்ணம் சிற்சபைக்கு செல்கின்றனர்.இந்த தரிசனக்காட்சியையே ஆருத்ரா தரிசனம் என்பர்.
இந்த அற்புதக் காட்சியைக் காண தமிழகத்திலிருந்து மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள்.வாழ்வில் ஒருமுறையாவது இந்த தரிசன காட்சியை பக்தர்கள் கண்டு களிக்க வேண்டும்.

சனி, 18 டிசம்பர், 2010

எஸ் .எம் .எஸ் சிரிப்புகள்

1 .துறை தலைவர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூங்கினா போதும்...!
மாணவன் - வீட்லையா , காலேஜிலையா சார்...
துறை தலைவர் - ??????

2.கிரிக்கெட் ஒரு பித்தலாட்ட விளையாட்டு ....
* கைல பால் வச்சிக்கிட்டு நோ பால்னு சொல்லுவாங்க .

* ஓவர்னு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போடுவாங்க.

*ஆல் அவுட்னு சொல்லுவாங்க .ஆனா பத்து பேருதான் அவுட் ஆகி இருப்பாங்க .

*ஒரு ஓவருக்கு ஆறு பால்னு சொல்லிட்டு ஒரு பால் தான் வச்சிருப்பாங்க .

*அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு விளையாட்டு வீரர் அவுட்டாம் .அப்ப ரெண்டு கைய தூக்கினா இருவர் தானே அவுட்.ஆனா சிக்ஸ்னு சொல்லுறாங்க.

என்ன விளையாட்டு இது....

3 . தி .மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்ப்பட போகும் மாற்றங்கள் ...
*தமிழ்நாடு 'கலைஞர் நாடு' என்று பெயரிடப்படும்.
*தமிழ்மொழி 'கனிமொழி' என்று மாறும்.
*மதுரை 'அழகிரி இல்லம்' என பெயர் மாற்றம் செய்யப்படும்.
*ஸ்டாலின் பிறந்த தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்.

புதன், 15 செப்டம்பர், 2010

நம்பிக்கை மலர்கள்

"நம்பிக்கை "
என் இனிய நண்பர்களே !!!!
சிதம்பரதிலிருந்து பிச்சாவரம் செல்லும் வழியில் கிள்ளை என்றொரு சின்னஞ்சிறு கிராமத்தில் இந்த" நம்பிக்கை " இல்லம் இருக்கிறது.இது ஒரு பெண்குழந்தைகள் காப்பகம்.இங்கு 30 பெண்குழந்தைகள் உள்ளனர். 9 முதல் 16 வயது சிறுமிகள் இந்த காப்பகத்தில் உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் சுனாமியில் பெற்றோரை இழந்தவர்கள் .மற்றவர்களும் ஏதோ ஒருவகையில் ஆதரவற்ற நிலையில் அந்த காப்பகத்தில் உள்ளனர்.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த சிறுமிகளை மூன்று வருடங்களுக்கு தத்து எடுத்து அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு கொடுத்து வந்தது.வருடத்திற்கு இரண்டு முறை உடுத்த ஆடையும் அளித்தது.அவர்கள் தங்குவதற்கு இரண்டு  ஏக்கர் பரப்பளவில் இந்த நம்பிக்கை இல்லத்தை கட்டி கொடுத்தது.அந்த சிறுமிகள் சுனாமிக்கு முன் படித்த பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வசதியும் செய்து கொடுத்தது.மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனம் தங்கள் சேவையை ரத்து செய்தபோது இல்லத்தின் காப்பாளர் கேட்டுகொண்டதற்கு இணங்கி அந்நிறுவனம் தங்கள் சேவையை மேலும் இரண்டு வருடங்கள் நீடித்தது.தற்போது அந்நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டது.
தற்சமயம் அப்பிள்ளைகளின்  மூன்று வேளை சாப்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

சென்ற முறை நான் அந்த காப்பகத்திற்கு சென்ற போது அப்பிள்ளைகளின்  இந்த நிலை எனக்கு தெரிய வந்த போது மிகவும் வேதனை அடைந்தேன்.இல்ல காப்பாளரிடம் என்னால் முடிந்த உதவி செய்வதாக கூறிவிட்டு வந்தேன்.
என் நண்பர்களாகிய நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால் அக்குழந்தைகளுக்கு உதவுங்கள்.
முகவரி:
"நம்பிக்கை",
கிள்ளை,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம்.

நன்றி.

வியாழன், 8 ஜூலை, 2010

ஓர் புது வரவு

வணக்கம்,

என் அன்பு மகனின் புதிய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.உங்கள் அன்பான ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்.நன்றி,நண்பர்களே!!!!http://rrkeasymoviedownload.blogspot.com

சனி, 3 ஜூலை, 2010

பிச்சாவரம்
சிதம்பரம் அருகே இருக்கும் , இயற்கை அழகு கொட்டிகிடக்கும் வனப்பகுதி.சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான இடம் இது.

சிதம்பரதிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.சாலைவசதி மேம்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல்,பயணம் எளிதாக உள்ளது.

பிச்சாவரம் ஒரு சதுப்பு நிலக் காடு. மூன்றாயிரம் ஏக்கர் நிலபரப்பில் பரவி உள்ளது. இங்கு சுரபுன்னை எனும் மாங்க்ரோவ் தாவரங்கள் நிறைந்துள்ளன.

இந்தியாவில் இரண்டே இடங்களில் தான் இவ்வகை காடுகள் உள்ளன.மற்றொரு இடம் கொல்கத்தா கடல் பகுதி ஆகும். இந்த சதுப்பு நிலம் கடலோடு இணைகிறது.

தண்ணீர் அதிக ஆழம் இல்லாமல் பல நூறு மைல்களுக்கு பரவி இருப்பதால் படகு பயணம் செல்ல அற்புதமான இடமாக உள்ளது .பச்சை பசேலென்று காணப்படும் சுரபுன்னை காடுகளிடையே படகில் பயணிப்பது பரவசம் ஊட்டும் அற்புதமான அனுபவம்.

திங்கள், 14 ஜூன், 2010

ஊருக்கு போகலாமா? மீண்டும் தொடர்கிறது.....

மோயார் அணை

மசினகுடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி பெற்று உள்ளே செல்லவேண்டும் என்பதால் நாங்கள் உள்ளே போகவில்லை.
நீர் தேக்கத்திற்கு அருகே சென்று அதன் அழகை ரசித்து விட்டு வந்தோம்.இந்த அணைக்கு செல்லும் வழியும் அடர்ந்த காடு தான்.ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக புள்ளிமான்கள் நின்று கொண்டிருந்தன.நமது நடமாட்டம் கண்டதும் ஓடி விடுகின்றன.

பிறகு அங்கிருந்து சிங்காரா என்ற இடத்திற்கு சென்றோம்.இங்கு ஒரு மின் உற்பத்தி நிலையம் உள்ளது.உள்ளே அனுமதி கிடையாது.ஆனால் போகும் வழியில் அழகிய நீரோடை ஒன்று உள்ளது.அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு மீண்டும் மசினகுடி வந்து சேர்ந்தோம்.
அன்று மாலை நாங்கள் எங்கும் செல்லவில்லை.ஒரு சிலர் தனியார் வைத்திருக்கும் வாகனங்களில் (ஜீப் )ரைடு போனார்கள்.ஆனால் அது எந்தவித பாதுகாப்பும் இல்லாதது.அப்படி போவது மிகவும் அபாயகரமானதும் கூட.
மறுநாள் காலை ஏழுமணிக்கு மீண்டும் முதுமலை வந்து வன அதிகாரியிடம் டிக்கெட் வாங்கிகொண்டு காத்திருந்தோம்.ஏழரை மணியளவில் பெரிய வாகனம் ஒன்றில் நாங்கள் ஒரு குழுவாக கிளம்பினோம்.மொத்தம் பதினான்கு பேர் இருந்தோம்.எங்களை தவிர்த்து வாகன ஓட்டுனர்,அவரது உதவியாளர் இருந்தனர்.மேலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் ஒருவரும் எங்களுக்கு துணையாக வந்தார்.


வாகனம் புறப்பட்டு சிறிது தூரம்பிரதான சாலையில் சென்றது.பிறகு வனத்துறையினர் மட்டும் பயன்படுத்தும் அடர்ந்த காட்டு வழியில் போக ஆரம்பித்தது.எங்கும்அமைதி.இரண்டு பக்கமும் உற்று பார்த்தவண்ணம் பயணித்தோம்.முதலில் நாங்கள் பார்த்தது சாம்பல் நிற மான்கள்.எங்களை பார்த்ததும் மிரண்டு ஓடின.


சிறிது நேரம் பயணித்ததும் கூட்டம் கூட்டமாக புள்ளி மான்கள் நின்றுகொண்டிருந்தன  .பிறகு சிறிது தூரம் சென்றதும் கூட்டமாக காட்டெருமைகள் நிற்பதை பார்தோம்.அதையும் தாண்டி தோகை மயில்கள் ஆங்காங்கே நின்றன .கடைசியாக யானைகள் நின்றன.மீண்டும் நாங்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
மதியம் அங்கிருந்து ஊட்டிக்கு கிளம்பினோம்.


ஊட்டி அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மொத்தம் முப்பத்தியாறு கொண்டை ஊசி வளைவுகள் கடக்க வேண்டும்.மிகவும் செங்குத்தாக.வேகமாக பயணிக்க முடியாத படி சாலை செங்குத்தாக ஏறியது சற்றே பயமாக இருந்தது.
ஊட்டியில் ஒரு நாள் தங்கி

ரோஜா தோட்டம் ,தாவரவியல் பூங்கா என்று சுற்றிவிட்டு ஊருக்கு திரும்பினோம்.  மறக்க முடியாத ,அற்புதமான பயணமாக அமைந்தது.

புதன், 9 ஜூன், 2010

ஊருக்கு போகலாமா - தொடர்கிறது......

மசினகுடி ........


பந்திபூர் காட்டுக்குள் நாங்கள் பயணிக்க தொடங்கினோம்.எங்கும் அமைதி.பாதை வளைந்து நெளிந்து சென்று கொண்டே இருந்தது.கண்ணில் ஏதாவது மிருகங்கள் தட்டுபடுகிறதா என்று பார்த்தவண்ணம் பயணித்தோம்.ஒரு வழியாக கர்நாடக எல்லை முடிந்தது என்ற அறிவிப்பு தாங்கிய நுழைவு வாயிலை பார்த்ததும் மனதில் ஒரு சிறிய அமைதியுடன் திரும்பினால் எதிரே மீண்டும் ஒரு நுழைவு வாயில்.'தமிழக எல்லை ஆரம்பம்.முதுமலை புலிகள் காப்பகம் அன்புடன் வரவேற்கிறது 'என்ற அறிவிப்பு எங்களை மீண்டும் மிரட்டியது.

உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பக்கமும் யானைகள் தென்பட்டன.சாலையோரமாக நின்றுகொண்டு மரக்கிளைகளை உடைத்து அதன் இலைகளை தின்றவண்ணம் இருந்தன.அவற்றை வேடிக்கை பார்த்தவண்ணம் தொடர்ந்தோம்.சில கிலோ மீட்டர் தூரம் பயணித்ததும் மீண்டும் யானை.ஆனால் இந்த முறை தனியாக நின்று கொண்டு இருந்தது.பொதுவாக ஒற்றை யானை அபாயகரமானது என்பார்கள்.அந்த யானை இலைகளையும் மண்ணையும் வாரியெடுத்து தலையில் போட்டவண்ணம் நின்றுகொண்டு இருந்தது.எங்களை போல் இன்னும் சிலரும் அந்த வழியாக அப்போது வந்தனர்.அதே நேரம் வனத்துறை காவலர் அவ்வழியாக வந்தவர் ,எங்களை உடனடியாக அந்த இடத்திலிருந்து விலக சொல்லி விட்டு அவர் மட்டும் தொடர்ந்து அந்த யானையின் நடவடிக்கையை கவனிக்க தொடங்கினார்.

ஒரு வழியாக நாங்கள் மசினகுடிக்கு வந்து சேர்ந்தோம்.மசினகுடி முதுமலையிலிருந்து ஏழாவது கிலோமீட்டரில் உள்ளது.அது ஒரு சிறிய கிராமம்.நாங்கள்தங்கவேண்டிய இடம் அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.அந்த இடத்திற்கு பொக்காபுரம் என்று பெயர்.அங்கு தனியாருக்கு சொந்தமான சில ரிசார்ட்டுகள் உள்ளன.பெரும்பாலானோர் ஊட்டியில் இருந்து வந்து உடனே திரும்பிவிடுகிறார்கள்.ரிசார்ட்டுகள் தவிர வேறு வசதிகள் அங்கு இல்லை என்பதே இதற்கு காரணம்.
பயண களைப்பால் நாங்கள் அன்று வேறு எங்கும் போகவில்லை.எல்லா ரிசார்டுகளும் மின்சார வேலி போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.ஆனால் அதையும் தாண்டி விலங்குகள் வரக்கூடும் என்பதால் இரவில் அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர் .
மறுநாள் ....
காலையில் கிளம்பி முதுமலை சென்றோம்.சுற்றுலா துறை அலுவலகம் சென்றோம்.ஆனால் காலை ஏழு மணிக்கு தொடங்கி ஒன்பது மணிக்குள் காட்டுக்குள் செல்லும் ரைடு முடிந்தது என்றும் மீண்டும் மாலை மூன்று மணிக்கு தான் என்றும் அங்கிருந்த அலுவலர் கூறினார்.மறுநாள் காலை ஏழு மணிக்கு வரலாம் என முடிவு செய்து அங்கிருந்து மீண்டும் மசினகுடி வந்தோம்.


 அங்கிருந்து மோயார் அணைக்கு ........

                                                                                 தொடரும்.................

ஞாயிறு, 6 ஜூன், 2010

ஊருக்கு போகலாமா!

மசினகுடி

இயற்கை எழில் கொஞ்சும் இந்த அழகிய இடம் தான் இந்த கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
எங்கு திரும்பினாலும் அடர்ந்த காடுகள்.பச்சை போர்வை போர்த்தியது போல் அழகான மலைத்தொடர்கள் நம் மனதை கொள்ளை கொள்கிறது.

ஆங்காங்கே கண்ணில் படும் வனவிலங்குகள் எங்கள் பயணத்தை மேலும் சிறப்பாக ஆக்கியது.
வெயிலும் நிழலும் மாறி மாறி வருகிறது.

மசினகுடி ஊட்டியிலிருந்து கல்ஹாட்டிவழியாக மைசூர்செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் உள்ளதால் மிதமான குளிர்காற்று வீசி எங்கள் மனதிற்கு இனிமை சேர்த்தது.
மதியம் 1 .00 மணிக்கு தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 3 .00 மணிக்கு சிதம்பரத்திலிருந்து கிளம்பினோம் .
திருச்சியில் காலை உணவு முடித்துவிட்டு ,கரூர் வழியாக சென்று மதியம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவு வாங்கிக் கொண்டு சத்தியமங்கலம் அருகே சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.அடர்ந்த காடு என்பதால் வனவிலங்கு நடமாடும் பகுதி என்று எழுதப்பட்ட பலகைகள் கண்ணில் படுகிறது.ஆகவே வாகனத்தை சற்றே மெதுவாகத்தான் செலுத்தமுடிந்தது.


பண்ணாரி தாண்டியதும் மலைப் பாதை ஆரம்பிக்கிறது .27 கொண்டைஊசி வளைவுகள் தாண்டியதும் கர்நாடக எல்லை நம்மை வரவேற்கிறது.மலைக்கு இந்தப் பக்கம் தமிழகம் .மறுபக்கம் கர்நாடகா.மலை ஏறும்போது வளைந்து நெளிந்து செல்லும் பாதை மறுப்பக்கத்தில் அதிக வளைவுகள் இல்லாமல் ஒரே சீராக இறங்குகிறது.
எங்கும் பசுமை.நேராக சென்ற பாதை சாம்ராஜ் நகர் வந்ததும் இடது பக்கமாகபிரிந்து கொண்டல்பெட் தாண்டி பந்திப்பூர் காட்டுக்குள் நுழைகிறது.அடர்ந்த காடு நம்மை மிரட்டுகிறது.எங்கும் அமைதி.பறவைகளின் சத்தம் மட்டும் கேட்கிறது.ஆங்கங்கே எங்களை கடந்து செல்லும் வாகனங்கள் எங்களுக்கு சிறிது தைரியத்தை கொடுத்தது.அப்போது நேரம் மதியம் 3 மணி..........


தொடரும் .........

வெள்ளி, 28 மே, 2010

மலர்கள்

என் வீட்டு தோட்டத்து மலர்களின் அணிவகுப்பு........
Pit