சனி, 5 நவம்பர், 2011
வியாழன், 3 நவம்பர், 2011
கண்ணீர்...
கண்ணீர் பெரும்பாலும் நம் வேதனைகளையும் ,வலியையும் வெளிபடுத்துவதன்
அறிகுறி என நினைக்கிறோம்.ஆனால் எந்த ஒரு உணர்வு அதிகமானாலும் கண்களில்
கண்ணீர் வரும் என்பதை பலரும் அறிவதில்லை...
நம் வாழ்வில் , வலியை மட்டுமே அதிகமாக உணர்வதால் ,நாம் கண்ணீரை அதனுடன் பிணைத்து விடுகிறோம்.ஆனால் மனம் மிகவும் அமைதியாகவோ அல்லது ஆனந்தமாகவோ இருக்கும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதை நம்...மில்
பலரும் அறிந்திருக்கவில்லை. அன்பு, ஆனந்தம் ,அமைதி இவற்றின் மூலம்
கண்களில் கண்ணீர் வந்து ,அதை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால் வாழ்வின் ரகசியத்தை இன்னும் முழுமையாக உணர வில்லை என்றே எனக்கு நினைக்க தோன்றுகிறது. அப்படி
அனுபவிக்கும் பட்சத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் அதை தடுக்க
முயலாதீர்கள் ...அனுபவியுங்கள் அந்த கண்ணீரை......ஆனந்தத்துடன்..... ..:):):)
செவ்வாய், 14 ஜூன், 2011
தஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்
ராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெரியகோயில் கட்ட பயன்படுத்தி இருக்க வேண்டும்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
தஞ்சைக்கு தெற்கு ,தென்மேற்குத் திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும்,வாய்க்கால்களாலும் சூழப்பட்டுள்ளன.எனவே அந்த திசைகளின் வழியாக மிகவும் கனமான பெரிய கற்பாறைகளை கொண்டு வருவது கடினமான காரியம் ஆகும்.தஞ்சையை விட சற்று உயரமான தென்மேற்கு திசைப்பகுதியே போக்குவரத்துக்கு ஏற்ற நில அமைப்பு கொண்டது.மேலும் தஞ்சைக்கு மிக அருகில் கற்பாறைகள் கிடைக்கும் இடமும் இந்த பகுதி தான்.
இரண்டாவது காரணம்......
தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் பாறைகள் எந்தவகையை சேர்ந்ததோ அதே வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்துக் குன்னாண்டார்கோயில் பகுதி ஆகும்.
கற்களே இல்லாத ஓர் இடத்திற்கு பல்லாயிரக்கணக்கான டன்கள் எடையுடைய கற்களை ,ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வந்து கட்டியுள்ளனர்.அக்காலத்தில் எந்த ஒரு தொழில் நுட்ப வசதிகளும் இல்லாதபோதும் பிரம்மாண்டமான பாறைகளை கொண்டு வந்தது மகத்தான சாதனையே.
இந்த தகவல் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் 'இராஜராஜேச்சரம்' புத்தகத்தில் உள்ளது.
இதே போன்று விஜயநகர பேரரசு காலத்தில் 18 ' நீளமும்,8 ' அகலமும் ,12 ' உயரமும் உடைய நந்தியை வைத்ததும் மிகப் பெரிய சாதனையே.
இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கி.பி. 750 இல் சோழ நாட்டில் நந்திபுரத்து ஆயிரத்தளி என்னும் ஊரில் ஆயிரம் லிங்கங்களை பிரதிட்டை செய்து ஓர் ஆலயம் கட்டினான்.பின்பு அந்த ஆலயம் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.அழிக்கப்பட்ட அந்த ஆலயம் இருந்த பண்டைய நந்திபுரம் என்னும் பேரூர் தற்போது தஞ்சைக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை,செங்கமேடு,இரட்டைக்கோயில்,ஆவிக்கரை என்னும் சிற்றூர்களாக மாறி விட்டன.
இரண்டாம் சரபோஜி மன்னர் வீரசிங்கம் பேட்டையிலிருந்து புதையுண்டு கிடந்த 108 சிவலிங்கங்களை எடுத்து வந்து 1801 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாளில் தஞ்சை கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பிரதிட்டை செய்தார்.
.பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப் பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல் மாலிக்கபூரின் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை காண முடியவில்லை . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்பது வரலாற்று உண்மை .
ராஜராஜன் இலங்கையை முழுதும் வென்றான்.அதனால் அவனுக்கு 'சிங்களாந்தகன்' என்ற பெயர் உண்டு.இலங்கைக்கு மும்முடி சோழமண்டலம் என்று பெயரிட்டான்.தஞ்சை பெரியகோயில் வழிபாட்டிற்கு இலங்கையிலும் நிலம் கொடுக்கப்பட்டது.
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
தஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....
தமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே.அவர்களை சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் ,சங்க காலச் சோழர்,பிற்காலச் சோழர் என்று மூன்று வகையினராக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்து உள்ளனர்.
சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்
சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள் பற்றி கலிங்கத்துபரணி,மூவருலா,மற்றும் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மனு, சிபி இவர்களின் சரித்திர செய்திகள் சங்க நூல்களில் உள்ளன.
இவர்களை தொடர்ந்து ககுத்தன்,துந்துமாறன்,முசுகுந்தன்,வல்லபன்,துஷ்யந்தன்,பரதன்,வீரசேனன்,சித்ராசுரன்,என்று மேலும் பலர் ஆண்ட இம்மண்ணில் கவேரன் என்பவன் காவிரியின் ஓட்டத்தை சோழ மண்ணிற்கு உருவாக்கி கொடுத்தவன்.
இவர்களுக்கு பின் புலிகேசி,சமுத்ரஜித் ,வசு,பெருநற்கிள்ளி,மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்டமண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன்.இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன்.காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன்.இவன் காலம் கி. மு. 260 - 220 .
இவனை தொடர்ந்து கோச்செங்கணான்,கிள்ளிவளவன் ,மணிமுடிசோழன்,மற்றும் பலர் ஆண்டனர்.
சங்ககாலச் சோழர்கள்
இவர்களுள் கிள்ளிவளவன்,கோப்பெரும் சோழன்,நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி,சோழன் செங்கணான், ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களாக விளங்கினர். சங்ககால சோழர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக தெரிகிறது.
கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது.குறிப்பாக கி.பி 250 முதல் கி.பி. 575 வரை உள்ள 300 ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர்.அக்காலகட்டத்தில் வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் ,அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர்.களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர்.
சோழர்கள் களப்பிரர்களாலும் ,பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




