குங்குமம் தோழியில் ஸ்டார் தோழி
மலர்விழி ரமேஷ்
* மலர் என்ற நான்...
அமைதி, சற்று கூச்ச சுபாவம்... பழக ஆரம்பித்தால் பாகுபாடு பார்க்காமல் சகஜமாக பழகும் இயல்பு. எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆராய்ந்து நல்லது கெட்டது எடுத்து சொல்லும் - அதே நேரத்தில் உள்ளுக்குள் ஒரு சிறுபிள்ளைத்தனம் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாதவள்... அப்பாவின் எழுத்தும் அம்மாவின் அறிவும் சேர்ந்து செய்த கலவை!
* ஊரும் வீடும்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பிறந்த ஊர். தஞ்சையில் வாழும் அப்பா-அம்மா, சென்னையிலும் கொச்சினிலும் வாழும் இரண்டு அழகிய தங்கைகள் என அன்பான குடும்பம். தஞ்சை மண்ணின் மகள் என்பதில் நிரம்பவே பெருமை உண்டு. அப்பாவின் நேர்மையான போக்கு எனக்குள் ஊறிப் போனது என்பதால் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் அல்ல... நிறைய அனுபவங்களும் உண்டு.
* பள்ளி வாழ்க்கை
கோதையாறு, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என பல இடங்களில் வாழ்ந்திருந்தாலும் புதுக்கோட்டை ராணி மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 வருடங்கள் மறக்க முடியா நாட்கள்... ராஜி, காயத்ரி, லட்சுமி, நாகலட்சுமி என அப்போதைய நெருங்கிய தோழிகளை இன்னும் தேடி வருகிறேன் ஏக்கத்தோடு. எங்கே அவர்கள்?? மல்லிகா டீச்சரின் கண்டிப்பு, பனிமயம் டீச்சரின் கனிவு, பார்வை இல்லையென்றாலும் அதை ஒரு குறையாக நினைக்காமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா’ என்றும், ‘குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ என்றும் பாடி, எங்களையும் பாட வைத்து, என்னுள் பாரதியின் மேல் காதலையும், கடவுளின் மேல் பக்தியையும் விதைத்த பாட்டு டீச்சர் என பள்ளி நாட்கள் நினைவுகளோடு, வளமான அறிவுசார் எதிர்காலத்தையும் தந்தது.
* வசிப்பிடம்
ஆடல்வல்லான் நடராஜரும், வைணவ கடவுள் கோவிந்தராஜனும் ஒரே இடத்தில் அருகருகே காட்சி தரும் புகழ்பெற்ற ஸ்தலமாம் சிதம்பரத்தில் வசிக்கும் பேறு பெற்றுள்ளேன். உலகின் மையப்பகுதி என்பதால் அதிக சக்திவாய்ந்த இடமும் கூட.
* கணவர்
ஒரு சிறந்த கணவனாக, ஆசானாக, தோழனாக என்னுடைய வாழ்வின் இரண்டாம் பகுதியை மிகவும் ரம்மியமாக மாற்றிய என்னுடைய கணவர் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்... வடக்கு, தெற்காக எல்லாவற்றிலும் இரு வேறு கருத்துடைய நானும் என் கணவரும் ஒருமித்த தம்பதியாக 25 வருட மணவாழ்க்கையை இன்பகரமாகக் கொண்டு செல்வதற்கு முக்கிய காரணம் பரஸ்பரம் விட்டு கொடுத்தலே. சற்றும் யோசியாமல் யாராவது ஒருவர் சட்டென சொல்லும் ‘சாரி’ என்ற வார்த்தையில் அடங்கியுள்ளது வாழ்க்கை ரகசியம். விட்டு கொடுத்தால் வாழ்க்கை என்றும் அழகானது, இன்பகரமானது, ரம்மியமானதும் கூட!
* குழந்தைகள்
கல்லூரியில் படித்து வரும் அன்பும் பாசமும் நிறைந்த இரண்டு மகன்கள்... குழந்தைகள் நம் பொக்கிஷங்கள்... நம்முடைய பிரதிபலிப்பு. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே அவர்களிடம் காணலாம். எதிர்காலத்தில் தந்தையைப் போல நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
* வாசிப்பு
என்னுள் இருக்கும் தேடல் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது. 5 வயதில் அம்மா படித்துக் காட்டிய ‘அம்புலிமாமா’, ‘கோகுல’த்தில் ஆரம்பித்தது வாசிக்கும் சுகம். தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ், கடல் கொண்ட குமரிகண்டம், அர்த்தமுள்ள இந்து மதம், கல்கியின் அனைத்துக் கதைகள் என தேடித் தேடி படித்துச் சேமித்த பொக்கிஷங்கள் ஏராளம். அன்றும் இன்றும் என்றுமே என் வாசிப்பின் முதல் இடத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்! சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, ஜாவர் சீதாராமன், அகிலன் என்று பலர் எழுத்துகளையும் சுவைத்துள்ளேன்.
* கேமரா காதல்
எத்தனை முறை படம் பிடித்தாலும் அலுத்துப் போகாத ஓர் இடம் தஞ்சை பெரிய கோயில். பல முறை பல கோணங்களில் எடுத்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் புது அழகு தெரியும். அதிகாலை சூரியன்... தினம் தினம் படம் பிடித்தாலும் அதில் ஒரு சிறு மாற்றத்தோடு அதி அற்புதம் காட்டும் கதிரவனின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. (Facebook: Vizhiyin Vizhiyil - Malar’s Clicks)
https://www.facebook.com/Vizhiyin-Vizhiyil-Malars-Clicks-352007434904246/
* உடல்நலம்
எலும்புத் தேய்மானம், தண்டுவடத்திலும் விலா எலும்புகளிலும் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கடும் வலியோடும் வேதனையோடும் கஷ்டப்பட்டு 5 ஆண்டுகளாகப் போராடி வந்தாலும், மனம் தளர விடாமல் ஏதோ ஒருவகையில் என்னை நிதானப்படுத்திக்கொண்டு இருக்கையில், 3 வருடங்களுக்கு முன்பு மருத்துவர் கூறிய வார்த்தைகள் பேரிடியாக என்னுள் இறங்கியது நிஜம். நான் ரசித்து ஈடுபாடோடு செய்த விஷயத்தைச் செய்யக் கூடாது என கூறியதுதான். ஆம்... ‘இனி சமைக்கக் கூடாது... கூடிய வரை நல்ல ஓய்வு கொடுங்கள்’ என்று கூறியதும் மொத்தமாக நொறுங்கிப் போனேன். இருந்தாலும் அவ்வப்போது எதையாவது செய்துவிட்டு கணவர், பிள்ளைகளிடம் பாட்டு வாங்குவது வழக்கம்.
* சமீபத்திய சாதனை
வீட்டுத் தோட்டத்துக்கு விருந்தாளி போல வந்து ஒரு பொந்திலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி என்னிடம் நலம் விசாரித்த நாகராஜனை பெர்ர்ர்ர்ரும் நடுக்கத்தோடு படம் பிடித்து அதை முகப்புத்தகத்தில் உள்ள ஒரு குழுவின் போட்டிக்கு அனுப்பி முதல் பரிசை தட்டிச் சென்றது மகிழ்வான தருணமே.
*முடியாது என தெரிந்தும் விரும்புவது...
கல்லூரி நாட்களில் மேடை ஏறி நடனம் ஆடியது போல் மீண்டும் நடனம் ஆட ஏங்கும் மனம்.
* முடியும் என தெரிந்து விரும்புவது...
என்னில் எனக்கு மிகவும் பிடித்த எனது கண்களை தானமாக கொடுக்க ஆசை.
(விரிவாகப் படிக்க... kungumamthozhi.wordpress.com)
1 கருத்து:
- Nice article thanks this post share
கருத்துரையிடுக