நான் வளர்க்கும் ஈமு பறவையை பற்றி சில வரிகள் உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன் .
இது ஒரு ஆஸ்திரேலியப் பறவை . நம் நாட்டில் இப்பொழுது தான் ஓர் அளவிற்கு காணமுடிகிறது . உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய பறவை ஈமு தான் . உயிர் வாழும் பறவைகளில் நெருப்புகோழி தான் மிகப் பெரிய பறவை .
ஈமுவால் பறக்க முடியாது . ஆனால் மிக வேகமாக ஓட முடியும் . இது ஓட ஆரம்பித்தால் மணிக்கு 50 கி .மி வேகத்தில் ஓட முடியும் . ஓடி வரும் வேகத்தில் அது 10 அடி உயரத்தை கூட சர்வசாதாரனமாக தாண்டிவிடும் . இதன் உயரம் 6 அடிக்கும் மேல் . அதன் எடை 50 கிலோ இருக்கும் .
ஈமு பலவகை தாவரங்களை உண்ணும் . குறிப்பாக முருங்கை கீரை அதன் இஷ்ட உணவு . எந்த ஒரு சிறு பூச்சிகளையும் விடாமல் தின்றுவிடும் . எல்லா வித தானியங்களையும் சேர்த்து பொடியாக்கி அதற்கு தீவனமாக கொடுக்கிறோம் . காலையில் உண்ண ஆரம்பித்தால் மாலை ஆறு மணி வரை விடாமல் சாப்பிட்டுகொண்டே இருக்கும் . சில நேரங்களில் தொடர்ந்து 15
நாட்கள் கூட சாப்பிடாமல் இருக்கும் .
ஈமு முட்டை மிகவும் பெரியதாக இருக்கும் . பொதுவாக ஈமு நவம்பர் , திசம்பர் , ஜனவரி மாதங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை இடும் .
ஈமுவின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன்படுகிறது . ஆஸ்திரேலியாவில் அதனுடைய கறியை சமைத்து உண்கிறார்கள் . அதன் இறகுகள் கைவினை பொருட்கள் செய்ய பயன்படுகிறது . அதன் தோல் பதப்படுத்தப்பட்டு பைகள் செய்யப்படுகிறது . ஈமு உடலில் உள்ள கொழுப்பு எடுக்கப்பட்டு ஈமு எண்ணெய் தயாரிக்கிறார்கள் . அதன் நகங்கள் ஆபரணங்கள் ஆக்கப்படுகின்றன .
மழை என்றால் ஈமுவிற்கு மிகவும் பிடிக்கும் . வானம் இருட்டி கொண்டு இருந்தால் துள்ளி விளையாடி நடனமிடும் . ஈமுவின் கழிவு
செடிகளுக்கு உரமாக பயன்படுகிறது .




