சனி, 5 பிப்ரவரி, 2011

ஊழல் இடையே நான் கண்ட நேர்மை....

ஊழல்,திருட்டு,பொய்,பிறர் சொத்தை அபகரித்தல் ,இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு செய்தி நம் காதுக்கு வருகிறது.குறிப்பாக ஊழல்.இவையெல்லாம் என்ன என்றே தெரியாமல் அறியா பருவத்தில் நேர்மை ,ஒழுக்கம் இவற்றை மட்டும் பள்ளிகளில் கற்று வரும் நாம் வெளியே வந்ததும் ,நம்மை வழி நடத்தும் இந்த சமுதாயம் இதற்கு எதிர்மறையாக உள்ளது என்பதை தெரிந்து கொள்கிறோம்.
ஊழல்,ஊழல்,ஊழல்.......
முன்பெல்லாம் முறையற்ற வகையில் காரியம் நடக்க லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது.ஆனால் இப்போது நமது காரியம் சரியான முறையில் நடைபெறவேண்டும் என்றால் அதற்கும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நியதி உருவாகி விட்டது.
ஒரு சாதாரண வேலையில் இருக்கும் அலுவலர் லஞ்சம் வாங்கினால் ,அவரை உடனே கைது செய்யும் நம் நாட்டு சட்டம் ,பல கோடிகளை சுருட்டுபவர்களை விட்டு விடுகிறது.ஒரு நாடு  நன்றாக இருக்க ,தலைமை நன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
அதுவே சரியில்லை என்றால் நாடு எங்ஙனம் சிறக்கும்?
நேர்மை என்றால் என்ன என்று கேட்கும் நிலை இன்று உருவாகி விட்டது.நேர்மையான தொழிலாளியையும் ,அதிகாரியையும் இன்று காண்பது மிகவும் அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த நம் தமிழகத்தில், தன் பணியில் சிறிதும் நேர்மை தவறாத ,'என் கடன் பணி செய்து கிடப்பதே 'என்ற வரிகளுக்கு சரியான உதாரணமாய் வாழ்ந்த,இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ,நான் சந்தித்த ஒரு ஓய்வு பெற்ற பெரியவரை பற்றி சில வரிகள் பகிர விரும்புகிறேன்.மின்சார வாரிய பொறியாளரான அவர் வேறு ஒரு நகரத்திற்கு ,மாறுதல் பெற்று அவ்வூரின் நகராட்சி பொறியாளராக சிறப்பு நியமனத்தில் மூன்று வருடம் பணி செய்ய வந்தார்.அதுவரை லஞ்சத்தில் ஊறி கிடந்த அந்த நகராட்சிக்கு புதிய பொறுப்பில் வந்த நம் பெரியவரை மரியாதை நிமித்தம் சந்திக்க 'அன்பளிப்புடன்' வந்த ஊர் பெரியமனிதர்களும்,அரசியல்புள்ளிகளும் ,அவர் கண்டிப்புடன் மறுத்ததை அதிசயமாக பார்த்து திரும்பினர்.
அதன்பிறகு துரிதகதியில் அவர் செயல்பட்ட விதம் காரணமாக ஒரே ஆண்டில் அவ்வூரில் நிலுவையில் இருந்த அனைத்து மின்வேலைகளும் முடிவு பெற்று ,ஒரு கட்டத்தில் அந்நகரில் அனைத்து தெருவிளக்குகளும் எரியும் நிலையை உருவாக்கினார்.புது இணைப்பு வாங்குபவர்கள் வரிசைப்படி மிகவும் விரைவாக இணைப்பு பெற்றனர் எந்த வித செலவும் (லஞ்சம்) இல்லாமல்.கட்சி பாகுபாடு இன்றி அவர் செயல்பட்டதால் ,அவருடைய மூன்று வருட பணி முடிந்த போது மேலும் இரண்டு வருடம் பணி நீடிப்பு கிடைத்தது.எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் அவர்கள் குறையை உடனே நீக்கிவிடுவார்.
ஆனால் அந்த ஐந்து வருட காலத்தில் அவர் சந்தித்த தொல்லைகள் ஏராளம்.கொலை மிரட்டல் கடிதங்கள் பல வந்தன.அவர் பெண்களை கடத்தி விற்க்கபோவதாகவும்,அவரை மணல் லாரி ஏற்றி கொள்ளபோவதாகவும் தொல்லை கொடுத்தனர்.இரவில் நடக்கும் மின்சார திருட்டுகளை கண்டு பிடித்து ஒழித்தால் பல பெரும்புள்ளிகளுடன் பகை வளர்ந்தாலும் ,நியாயமான முறையில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கி அவர்களின் அன்பையும் பெற்றார்.
இன்றும் அவருடைய ஐந்து ஆண்டு கால பணியை 'பொற்காலம்' என்று கூறி புகழும் பலரை நான் காண்கிறேன்.இன்றும் அவரை அவ்வூரில் உள்ள மக்கள்  நல்ல மரியாதை கொடுத்து அன்புடன் நடத்துகின்றனர். 
இவ்வளவு நேர்மையுடன் எந்தவித பயமும் இல்லாமல் ,மிகவும் துணிச்சலுடன் பணியாற்றிய அவரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை.
இப்படி பட்டவர்களை ஊக்கப்படுத்தினால் தானே நாமும் நேர்மையுடன் பணி செய்யலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்.ஊழல் நிறைந்த இந்த உலகில் நேர்மைக்கு ஏது மதிப்பு.....

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மூணாறு




தமிழகத்திற்கு அருகில் கேரளாவை சேர்ந்த மூணாறு, தேயிலை தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் மிகவும் அழகிய நகரம்.  பச்சை போர்வை போர்த்தியது போல் தோன்றும் அழகிய தேயிலை தோட்டங்களும், கண்களை கவரும் பசுமை நிறைந்த மரங்களும் ,வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையும் கண்கொள்ளா காட்சி.
தமிழ்நாடு ,கேரளா எல்லையில் அமைந்துள்ள இந்த அழகிய மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.தமிழகத்தில் போடிநாயக்கனூர் என்ற ஊரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.போடிமெட்டு என்ற இடத்தில தமிழக ,கேரளா எல்லை இருக்கிறது.
மூணாறில் பார்க்கவேண்டிய சில இடங்கள் , மாட்டுப்பட்டி அணை ,  ராஜமலை (இங்கு அபூர்வ வகை மலை ஆடுகளை காணலாம்), ஆனைமுடி ,கொளுக்குமலை தேயிலை தோட்டம்.
கொளுக்குமலை கடல் மட்டத்திலிருந்து 2175 மீட்டர் ( 7150 அடி ) உயரத்தில் உள்ள மிகவும் அழகிய இடம் .வழிநெடுகிலும் தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்த மலை உச்சியை அடைய தனியாருக்கு சொந்தமான ஜீப்புகள் உள்ளன.மிகவும் கரடுமுரடான அந்த பாதையில் ஜீப்புகளில் தான் பயணிக்க முடியும்.அதிகாலை 4 .30 மணிக்கு புறபட்டால் ஒருமணி நேரத்தில் அந்த இடத்தை அடையலாம்.5 .30 முதல் 7.30  வரை   அங்கே  காத்திருந்தால் ஆறு மணியளவில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம்.மூடுபனி இல்லாமல் தெளிவாக இருந்தால் இது ஒரு அற்புதமான அனுபவம்.இந்த மலை தான் உலகிலேயே உயரமான தேயிலை தோட்டம் அமைந்த மலை.இதன் ஒருபுறம் தேனி,கம்பமும் ,மறுபுறத்தில் கேரளாவையும் காணலாம்.





















வெள்ளி, 21 ஜனவரி, 2011

தஞ்சை பெரிய கோயில் - சில தகவல்கள்...






கி .பி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த போது நிசும்பசூதனி என்ற தேவி கோயில் ஒன்றினை தோற்றுவித்தான்.அவன் எடுத்த திருமேனி தற்போது தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வடபத்ரகாளிகோயில் என்னும் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் திகழ்கின்றது.
தஞ்சையில் சோழர் ஆட்சி மலர்ந்த போதே இத்தேவியின் கோயிலும் எழுந்ததாக வரலாறு கூறுகிறது.


பெரியகோவிலை சுற்றியுள்ள திருமதில் ராஜராஜனின் சேனாதிபதி கிருஷ்ணன் ராமனால் கட்டப்பட்டது.
கோயில்,கீழே இரண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு அதன் மீது உயரமாக அமைக்கப்பட்டது.இரு சுவர்களின் இடைவெளியில் இரண்டு அடுக்குகளில் நாம் நடந்து செல்லலாம்.ஒன்றில் நாட்டிய கரணச் சிற்பங்களும் ,மற்றொன்றில் ஓவியங்களும் உள்ளன.

ராஜராஜனின் ஆட்சிப் பரப்பு சோழ நாடு,பாண்டிநாடு,தொண்டைநாடு,கொங்குநாடு,சேரநாடு என்று தமிழ்நாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்ததோடு, குடமலைநாடு (குடகு பகுதி),கங்கபாடி (கர்நாடகத்தின் தென்பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தை ஒட்டிய பகுதி), நுளம்பபாடி(கர்நாடகத்தின் ஒரு பகுதி மற்றும் ஆந்திரத்தின் பெல்லாரி மாவட்டம்),தடிகைபாடி (மைசூர் பகுதி),வேங்கைநாடு (கிருஷ்ணா கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட சாளுக்கியநாடு ), கலிங்க நாடு (ஒரிஸ்ஸா ),சித்புலிநாடு (நெல்லூர் பகுதி ),பழந்தீவு பன்னீராயிரம் (சேர நாட்டிற்கு தென் மேற்கே அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகள்), ஈழத்தில் ஒரு பகுதி ஆகிய நாடுகளிலும் பரவி இருந்தது.

ராஜராஜன் தஞ்சை பெரிய கோயில் இறைவனுக்குத் தண்ணீரைக் கொட்டுவதுபோல் , இலட்சக்கணக்கான முத்துக்களைக் கொட்டி வழிபட்டான் .அவை சத்யாசிரியனையும் ,பாண்டியரையும்,சேரரையும் வெற்றி கண்டு கொண்டுவந்தவை.

வியாழன், 13 ஜனவரி, 2011

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ,அனைவருக்கும்  என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Pit