திங்கள், 4 ஏப்ரல், 2016

குங்குமம் தோழியில் முகம் தெரியாத உறவுகள்!






வெள்ளக் களத்தில் கடலூர் கண்மணிகள்

வெள்ளத்தின் ேகார தாண்டவத்தில் எல்லாவற்றையும் இழந்து நின்றவர்களின் கண்களில் நிறைந்து வழிந்த அந்த பயம்... அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற  கவலை ேதாய்ந்த முகம்... தொலைந்த உறவுகளைத் தேடி அலைந்த மனம்... இந்த  இழப்பின் வலி மனித மனங்களுள் புதைந்து கிடந்த நேசத்தை விழித்து எழ வைத்துள்ளது. சுனாமி, தானே புயல், சென்ற மாத வெள்ளம், இந்த மாத வெள்ளம் என இயற்கையின் கோபத்தை எல்லாம் தன் மடியிலேயே தொடர்ந்து தாங்கி வருகிறது கடலூர். இப்பகுதியில் கண் துஞ்சாது களப்பணியாற்றிய தோழிகள் சிலரோடு பேசினோம்...


மலர்விழி ரமேஷ்


சிதம்பரத்தில் வாழும் மலர்விழி புகைப்படக் கலைஞரும் கூட. ரூ.50 லட்சத்துக்கும் மேல் நிவாரணப் பொருட்களைத் திரட்டி வெள்ளப் பாதிப்பு பகுதிகளில்  முறையாக விநியோகித்து வருகிறார். ‘‘உதவும் குணம் எங்களது வீட்டில் இருந்தே தொடங்கியது. மாமனார் மருத்துவர், கணவரும் மருத்துவர். ஒவ்வொரு மாதத்திலும் இறுதி ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். வெள்ளப் பாதிப்புகள் தொடங்கிய உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளின் படங்களை ஃபேஸ்புக்கில் ஏற்றினேன். புகைப்பட நண்பர்கள் குழுவாக உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். கடலோரத்தில் இருந்த தில்லை என்ற கிராமத்தில் வீடுகள் இருந்த சுவடே காணாமல் போனது. ெசன்னைக்கு முன்பாகவே கடலூர் கிராமங்கள் வெள்ளத்தில் வீடுகளை இழந்தன. பின்தங்கிய கிராமங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. 


கடலூர் பகுதி கிராமங்களில் எந்த வெள்ளத்தாலும் அடித்துச் செல்ல முடியாத அளவுக்கு சாதிப் பிரச்னையும் வலுவாக இருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி நிவாரணம் தேவைப்படும் மக்களை கண்டறிந்து பொருட்களை வழங்கினோம். கடலோர கிராமங்களில் சமைத்து உண்ணவும் வழியற்று வாடிய மக்களுக்காக ‘நம்பிக்கை இல்லம்’ பெண்கள் இணைந்து சமைத்துத் தந்தனர். இன்னும் பெட்ஷீட் போன்ற உதவிப் பொருட்கள் தேவைப்படுகிறது. வெள்ளத்தில் வாழ்க்கையை இழந்து நிற்பவர்களுக்கு நாம் செய்யும் உதவி சிறு துளிதான்’’ என்று நெகிழ்கிறார் மலர்விழி.




SharFacebooTwitte

குங்குமம் தோழியில்   ஸ்டார் தோழி


மலர்விழி ரமேஷ்

* மலர் என்ற நான்... 
  
அமைதி, சற்று கூச்ச சுபாவம்... பழக ஆரம்பித்தால் பாகுபாடு பார்க்காமல் சகஜமாக பழகும் இயல்பு. எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆராய்ந்து நல்லது கெட்டது எடுத்து சொல்லும் - அதே நேரத்தில் உள்ளுக்குள் ஒரு  சிறுபிள்ளைத்தனம் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாதவள்... அப்பாவின் எழுத்தும் அம்மாவின் அறிவும் சேர்ந்து  செய்த கலவை!

* ஊரும் வீடும்
  
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பிறந்த   ஊர். தஞ்சையில் வாழும்  அப்பா-அம்மா, சென்னையிலும் கொச்சினிலும் வாழும் இரண்டு அழகிய தங்கைகள் என அன்பான குடும்பம். தஞ்சை மண்ணின் மகள் என்பதில் நிரம்பவே பெருமை உண்டு. அப்பாவின் நேர்மையான போக்கு எனக்குள் ஊறிப் போனது என்பதால் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் அல்ல... நிறைய அனுபவங்களும் உண்டு. 

* பள்ளி வாழ்க்கை 

கோதையாறு, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என பல இடங்களில்  வாழ்ந்திருந்தாலும்  புதுக்கோட்டை ராணி மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 வருடங்கள் மறக்க முடியா நாட்கள்... ராஜி, காயத்ரி, லட்சுமி, நாகலட்சுமி  என  அப்போதைய நெருங்கிய   தோழிகளை இன்னும் தேடி வருகிறேன் ஏக்கத்தோடு. எங்கே  அவர்கள்??  மல்லிகா  டீச்சரின்  கண்டிப்பு, பனிமயம் டீச்சரின் கனிவு, பார்வை  இல்லையென்றாலும்  அதை  ஒரு  குறையாக நினைக்காமல்  தன்னம்பிக்கையோடு வாழ்ந்து ‘ஒளி படைத்த  கண்ணினாய்  வா வா’  என்றும், ‘குறையொன்றும்  இல்லை  மறை  மூர்த்தி  கண்ணா’  என்றும்  பாடி, எங்களையும்  பாட வைத்து,  என்னுள்  பாரதியின்  மேல்  காதலையும்,   கடவுளின்  மேல்  பக்தியையும் விதைத்த  பாட்டு டீச்சர்  என  பள்ளி  நாட்கள்   நினைவுகளோடு, வளமான அறிவுசார் எதிர்காலத்தையும் தந்தது. 

* வசிப்பிடம்

ஆடல்வல்லான் நடராஜரும், வைணவ கடவுள் கோவிந்தராஜனும் ஒரே இடத்தில் அருகருகே காட்சி தரும் புகழ்பெற்ற ஸ்தலமாம் சிதம்பரத்தில் வசிக்கும் பேறு பெற்றுள்ளேன். உலகின் மையப்பகுதி என்பதால் அதிக சக்திவாய்ந்த இடமும் கூட.



* கணவர்

ஒரு சிறந்த கணவனாக, ஆசானாக, தோழனாக என்னுடைய வாழ்வின் இரண்டாம் பகுதியை மிகவும் ரம்மியமாக மாற்றிய என்னுடைய கணவர் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்... வடக்கு, தெற்காக எல்லாவற்றிலும்  இரு வேறு கருத்துடைய நானும் என் கணவரும் ஒருமித்த தம்பதியாக 25 வருட மணவாழ்க்கையை இன்பகரமாகக் கொண்டு செல்வதற்கு முக்கிய காரணம் பரஸ்பரம் விட்டு கொடுத்தலே. சற்றும் யோசியாமல் யாராவது ஒருவர் சட்டென சொல்லும் ‘சாரி’ என்ற வார்த்தையில்  அடங்கியுள்ளது வாழ்க்கை ரகசியம். விட்டு கொடுத்தால்  வாழ்க்கை என்றும்  அழகானது, இன்பகரமானது, ரம்மியமானதும் கூட! 

* குழந்தைகள்
    
கல்லூரியில் படித்து வரும் அன்பும் பாசமும் நிறைந்த  இரண்டு மகன்கள்... குழந்தைகள் நம் பொக்கிஷங்கள்... நம்முடைய பிரதிபலிப்பு.  நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே அவர்களிடம் காணலாம். எதிர்காலத்தில் தந்தையைப் போல நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

* வாசிப்பு

என்னுள்  இருக்கும்  தேடல்  என்னை  மீண்டும்  மீண்டும்  வாசிக்க  வைக்கிறது. 5  வயதில்  அம்மா  படித்துக்  காட்டிய  ‘அம்புலிமாமா’, ‘கோகுல’த்தில்  ஆரம்பித்தது  வாசிக்கும்  சுகம். தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ், கடல் கொண்ட குமரிகண்டம், அர்த்தமுள்ள இந்து மதம், கல்கியின் அனைத்துக் கதைகள் என தேடித் தேடி படித்துச் சேமித்த பொக்கிஷங்கள் ஏராளம். அன்றும் இன்றும் என்றுமே என் வாசிப்பின் முதல் இடத்தில் கல்கியின் பொன்னியின்  செல்வன்! சாண்டில்யன், பாலகுமாரன்,  சுஜாதா, ஜாவர் சீதாராமன், அகிலன் என்று பலர் எழுத்துகளையும் சுவைத்துள்ளேன்.

* கேமரா காதல்  

எத்தனை முறை படம் பிடித்தாலும் அலுத்துப் போகாத ஓர் இடம் தஞ்சை பெரிய கோயில். பல முறை பல கோணங்களில் எடுத்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் புது அழகு தெரியும். அதிகாலை சூரியன்... தினம் தினம் படம் பிடித்தாலும் அதில் ஒரு சிறு மாற்றத்தோடு அதி அற்புதம் காட்டும் கதிரவனின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. (Facebook: Vizhiyin Vizhiyil - Malar’s Clicks)
https://www.facebook.com/Vizhiyin-Vizhiyil-Malars-Clicks-352007434904246/
* உடல்நலம்

எலும்புத் தேய்மானம், தண்டுவடத்திலும் விலா எலும்புகளிலும் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கடும் வலியோடும் வேதனையோடும் கஷ்டப்பட்டு 5 ஆண்டுகளாகப் போராடி வந்தாலும், மனம் தளர விடாமல் ஏதோ ஒருவகையில் என்னை நிதானப்படுத்திக்கொண்டு இருக்கையில்,  3 வருடங்களுக்கு முன்பு மருத்துவர் கூறிய வார்த்தைகள் பேரிடியாக என்னுள் இறங்கியது நிஜம். நான் ரசித்து ஈடுபாடோடு செய்த விஷயத்தைச் செய்யக் கூடாது என கூறியதுதான். ஆம்... ‘இனி சமைக்கக் கூடாது... கூடிய வரை நல்ல ஓய்வு கொடுங்கள்’ என்று கூறியதும்  மொத்தமாக நொறுங்கிப் போனேன். இருந்தாலும் அவ்வப்போது எதையாவது செய்துவிட்டு கணவர், பிள்ளைகளிடம் பாட்டு வாங்குவது வழக்கம்.

* சமீபத்திய சாதனை 

வீட்டுத் தோட்டத்துக்கு விருந்தாளி போல வந்து ஒரு பொந்திலிருந்து  தலையை மட்டும் வெளியே நீட்டி என்னிடம் நலம் விசாரித்த நாகராஜனை பெர்ர்ர்ர்ரும் நடுக்கத்தோடு படம் பிடித்து அதை முகப்புத்தகத்தில் உள்ள ஒரு குழுவின்  போட்டிக்கு அனுப்பி முதல் பரிசை தட்டிச் சென்றது மகிழ்வான தருணமே.

*முடியாது என தெரிந்தும் விரும்புவது... 

கல்லூரி நாட்களில் மேடை ஏறி நடனம் ஆடியது போல் மீண்டும் நடனம் ஆட ஏங்கும் மனம்.

* முடியும் என தெரிந்து விரும்புவது... 

என்னில் எனக்கு மிகவும் பிடித்த எனது கண்களை தானமாக கொடுக்க ஆசை.  
(விரிவாகப் படிக்க... kungumamthozhi.wordpress.com)


தினமலர் பொக்கிஷம் பகுதியில் என்னையும் எனது புகைப்படங்கள்  பற்றியும்  ஓர் அறிமுகம் தந்த நண்பர் திரு.முருகராஜ் அவர்களுக்கு நன்றி.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1258118












செவ்வாய், 5 மே, 2015

''பிரம்மக்கமலம் ''

அதிசய மலர் ''பிரம்மக்கமலம் ''




ஆண்டுக்கு ஒரு முறை பௌர்ணமி நாளில், இரவில் மட்டும் மலர்ந்து சில மணி நேரங்களில் மூடிக்கொண்டு விடும் அதிசய மலர் தான் ''பிரம்மக்கமலம்''.
இமயமலை வடக்கு, பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவை பூர்விகமாய் கொண்டது இம்மலர்.இமயமலையில் சுமார் 4000 மீட்டர் உயரத்தில் காணலாம் .
உத்தரகாண்டின் மாநில மலரும் இதுவே.





மருத்துவ குணங்கள் நிறைந்த இம்மலரின் தண்டு வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பக்கவாதத்தை குணப்படுத்தவும் பயனாகிறது .திபெத்தியர் இதை மூலிகையாக கருதி பயன்படுத்துகின்றனர் .






தகவல் உதவி - சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் திரு .செங்குட்டுவன் அவர்கள்.

செவ்வாய், 18 மார்ச், 2014

ஒருத்தியின் பார்வையில்


ஸ்ரீ  ராமனின்  பாதையில்  ஒரு புனித பயணம்.

    நற்குணங்களில் தலை சிறந்த குணம் , உயர்வு தாழ்வு கருதாமல் எல்லோரிடத்தும் எளிமையாக பழகுவது ..நம்மில் எத்தனை பேர் நம் நிலையிலிருந்து சற்று குறைவானவர்களுடன் சமமாக பழகுகிறோம். ஒருவரது உடையையும் , உடலையும் வைத்து மதிப்பிடாமல் ஸ்ரீ ராமனை போல் அவர்களது நல்ல உள்ளதை நோக்க வேண்டியது அவசியம்..அதுவே உண்மையான , உயர்வான பண்பு..ஸ்ரீ ராமன் ஒரு சக்ரவர்த்தியின் மகனாக இருந்தாலும் ஒரு வேடனான குகனை உற்ற தோழனாகவும், ராவணனின் தம்பியான அரக்கன் விபீஷணனை தனது தம்பியாகவும் ஏற்று கொண்டு ,அந்த  அன்போடு கலந்து மகிழ்ந்தார். என்னே ஒரு சிறந்த பண்பு இது என வியக்க வைக்கிறது..அன்னாரின் வழி நோக்கின் ஒருத்தரின் பிறப்பு, கல்வி, செல்வம் மற்றும் புற அழகு வைத்து அவர்களை எடை போடுவது தவறு.அவர்களின் உயர்ந்த உள்ளம் கண்டு அவர்களிடம் இனிமையாக பழகுவதே மிக சிறந்த பண்பு.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

சுயநலம்







''எனக்கு நானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதை விட ,மற்றவர்களுக்கு நன்மை செய்து ,அதனால் ஆயிரம் நரகங்கள் கிடைக்குமானாலும் அங்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.--சுவாமி விவேகானந்தர் ''

சுயநலம் வேண்டாம் ,நண்பர்களே ! நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவலாமே!
இவ்வுலகில் கஷ்டங்களும் ,துயரங்களும் இல்லாத மனிதன் இல்லை...ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வித கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.கடவுளுக்கு தெரியும் யாருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்க வேண்டும் என்று...ஒருவனால் எவ்வளவு சுமைகள் தாங்க முடியும் என்பது தெரிந்து தான் அவனுக்கு பொறுப்புகளையும் சுமைகளையும் கடவுள் நிர்ணயிப்பார்.
.பாரம் என்பது தேடி பெற்று கொள்வதில்லை.தானாகவே வருவது..தானாக விரும்பிச் சுமப்பதற்குப் பெயர் சுமை அல்ல. சுகம். அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒன்றுதான்..எனக்கு தான் கஷ்டங்கள் அதிகம் என்று யாரும் எண்ண வேண்டாம்.நம்மை விட அதிக கஷ்டங்கள் உடலாலும் உள்ளதாலும் பல பேருக்கு உண்டு ...அதை பார்த்து நாம் நன்றாகவே இருக்கிறோம் என்று சந்தோஷபட்டுக் கொள்வோம்.இருப்பதை வைத்து முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்வோம்.வரும் போதும் வெறும் கையுடன் வந்த நாம் போகும் போதும் அப்படி தான் போகிறோம்....இடையில் ஏன் இவ்வளவு பேராசைகள் ,மனிதனுக்கு....?

ஒருத்தியின் பார்வையில்.... முக புத்தகம்





























இது வெட்டி கதைகளுக்கும் ,வம்புகளுக்கும் மட்டும் தான் என்று பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது .. அது முற்றிலும் தவறானது என்பது என்னுடைய வாதம்...யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் இது கூறவில்லை.

தேசங்கள் கடந்த நட்புக்கள் ....முகம் தெரியாத சகோதர ,சகோதரிகள்,....மொழி பாகுபாடு இல்லாத உறவுகள், மதங்களில் பிரிவினை இல்லாத பாச பிணைப்புகள்.....இப்படி சொல்லி கொண்டே போகலாம்...இது அனைத்தும் இங்கு மட்டுமே சாத்தியமாகிறது .

நம் சந்தோஷங்கள் ,துக்கங்கள்,பண்டிகைகள் ,விழாக்கள் அனைத்தையும் வெளிபடுத்த ஒரு சின்னஞ்சிறு உலகம் இந்த பரந்த வலைத்தளத்தில். ..

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் எதாவது ஒரு தனி தன்மை இருக்கும்....பல நேரங்களில் அதை அவர்களுக்கு
வெளிபடுத்த வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.பல பேருக்கு குடும்பசூழ்நிலைகள் காரணமாக திணிக்கப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் சூழ்நிலை உருவாவது தவிர்க்க முடியாததாகிறது..இதனால் நாம் நம் தனிப்பட்ட தாகத்துக்கு தீனி போடுவது இல்லை.... .நமது தனித் தன்மைகள் ,திறமைகள்,ஆர்வங்கள் வெளிப்படுத்த நமக்கு கிடைத்த ஒரு வரப்ரசாதம் இந்த முகபுத்தகம்..

இல்லாதவர்களுக்கும்,கஷ்டபடுபவர்களுக்கும் உதவி செய்ய நினைக்கும் என்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல தடம்.. சில நாட்களுக்கு முன் இதே இடத்தில ஒரு நண்பர் பண உதவி கேட்டு வேண்டினார் தன்னுடைய நெருங்கிய நட்புக்கு....இப்படி பலபேருக்கு இதன் மூலம் பல நல்ல உதவிகள் கிடைக்கபெருகிறது.... நான் செல்லும் ஒரு காப்பகத்திற்கு உதவ சில நல்ல உள்ளங்கள் இங்கு கிடைத்திருப்பது வாழ்வில் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்....அந்த நல்ல உள்ளங்கள் செய்ய போகும் உதவிகள் சில ஏழை குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்...இது போன்ற உதவிகள் மேலும் கிடைக்கட்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

முக புத்தகம் வெட்டி கதைகளுக்கு மட்டும் அல்ல..!!!!!!!!!!
 

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஒருத்தியின் பார்வையில்....சுய ஆலோசனை ....:)







சுய  ஆலோசனை ....

நம்மில் எத்தனை பேர் சுய ஆலோசனை செய்கிறோம்..
அடுத்தவரை  குறை கூறும் நாம் சற்று நிறுத்தி நம்மை நாமே சுய ஆலோசனை செய்து கொள்கிறோமா ? அடுத்தவர்  முகத்தை நோக்கி குற்றம் கூற  நீட்டும் அதே கையை சற்றே நம்  பக்கம் திருப்பி பார்க்கிறோமா ?
இல்லையே....

"ஏதிலார் குற்றம் போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு."

அயலாரின் குற்றங்களை காண்பது போலவே  தம்முடைய குற்றங்களையும் காண்பாரானால் நிலை பெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ ?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உடனே உண்டு,அது நன்மையோ அல்லது தீமையோ...:)  இன்று நாம் செய்யும் பாவ மூட்டைகளை சுமக்க போவது நம்முடைய குழந்தைகள் தான் என்பதை மறக்க கூடாது...   போட்டி , பொறாமை , துர் எண்ணங்கள் உடையவர்கள் நிம்மதியாய் இருந்ததாய் அல்லது வாழ்க்கையில் முன்னேரியதாய் வரலாறே கிடையாது.

எந்த பிரச்சனை வந்தாலும் வார்த்தைகளை விடாமல் இருப்பதே நல்லது. அது அடுத்தவரை எவ்வளவு காயப்படுத்தும் என்று யோசிக்க வேண்டும். ஏனெனில்  "நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லை கொட்டினால் அள்ள இயலாது". நாம்  கூறிய வார்த்தைகள் சாகும் வரை மறக்காது.
இந்த உலகில் யாருமே முழுமையான மனிதராக இருப்பதில்லை எல்லோரிடமும் எதாவது ஒரு குறை இருக்கும்.இயன்றவரை முழுமையான மனிதராக வாழ முயற்சிக்கலாம்.
..
. எப்போதும் நல்ல எண்ணங்களையே வைத்திடுங்கள்.மனதை சுத்தமாக பொலிவுடன் வைத்திடுங்கள். விரோதிக்கும் நம்மையே செய்யுங்கள். அனைவரிடத்திலும் கருணை காட்டுங்கள்.முன்னால் சிரித்து பின்னால் குத்தாதீர்கள்..
துப்பாக்கி தோட்டாக்கள் உயிரை கொல்லும்...நெருப்பு நம்முடைய உடலை அழிக்கும்..கடும் வார்த்தைகள் மனதை காயப்படுத்தும்....ஆனால் அழகான புன்னகை இன்பத்தை மட்டுமே கொடுக்கும்
சின்னதாக ஒரு புன்னகை ,அன்பாக இரண்டு வார்த்தைகள் வெளிப்படுத்தி பாருங்கள் ...இவ்வுலகமே உங்கள் காலடியில்...:):):)



உருகும் பனிமலைகள்...


உலகின் முன்னணி துருவ பகுதிகளின் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான், சுற்றுச் சூழலை மாசு படுத்தாத எரிசக்திக்கு உலக மக்கள் மாற வேண்டியதை வலியுறுத்தி உலகமெங்கும் பிரயாணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.அவர் தன் பிரயாணத்தில் இந்தியா வந்த போது சென்னையில் நடந்த பல்வேறு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னையின் வெப்பம் அவருக்கு புத்துணர்ச்சியை தருவதாகவும் அதே நேரத்தில் அந்
த வெப்பத்தின் பின்னால் இருக்கும் அபாயம் அச்சத்தை ஊட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.அன்டார்டிகாவிலும் ,ஆர்டிக் பகுதியிலும் பனி மலைகள் வெகு வேகமாக உருகி வருவதாகவும் இதே நிலை நீடித்தால் இன்னும் 90 வருடங்களில் சென்னை கடலுக்குள் மூழ்கி விடும் என்றும் கூறியுள்ளார்.இன்னும் 90 வருடங்கள் கழித்து தானே...நாம் என்ன பார்க்கவா போகிறோம் அழிவதை என்று நினைக்க வேண்டாம்...அழியபோவது நம் சந்ததியினர் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர் தன்னுடைய உரையில் கடல் மட்டம் இரண்டு மீட்டர் உயரும் என்றும் அப்படி உயரும் பட்சத்தில் உலகில் பல்வேறு இடங்கள் கடலுக்குள் மூழ்கி விடும் என்றும் ,அதுவும் மிக விரைவில் நடக்கும் என எச்சரித்துள்ளார்.

இதை தடுக்க ஒரே வழி நிலக்கரி ,பெட்ரோலியம் போன்ற புகை கக்கும் பொருட்களுக்கு பதிலாக சூரிய சக்தி ,காற்று சக்தி போன்றவற்றை பயன் படுத்துவது மிகவும் சிறந்தது என வலியுறுத்தி வருகிறார்.
ஆண்டு தோறும் 200 மில்லியன் டன்கள் கார்பன் மோனாக்சைடும், 50 மில்லியன் டன் ஹைட்ரோ கார்பனும் ,150 மில்லியன் டன் சல்பர் டை ஆக்சைடும் ,190 மில்லியன் டன் சாம்பலும் ,காற்று மண்டலத்தில் கலந்து அதை நச்சு தன்மையாக மாற்றி வருகிறது.
கால நிலையை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் கரிய மில வாயு கடந்த 100 ஆண்டுகளில் தொழில் புரட்சி காரணமாக 26 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி டன் கார்பன் வெளியிடபடுகிறது.வாகனங்கள் ,தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து இந்த மாசு வெளியேறுகிறது. காடுகளை ஆண்டு தோறும் அழித்து வருவதால் 200 கோடி டன் கார்பன் சுத்திகரிப்பு தடை படுகிறது.வெளியேறும் கார்பனின் அளவு அதிகமாகவும்,சுத்திகரிப்பு செய்வது குறைவதும் ஆபத்திற்கான அறிகுறிகள்.இதன் காரணமாக உலக வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விளைவு...

அதிக வெப்பம் காரணமாக பனிமலைகள் உருகும். மனிதர்களுக்கு தோல் நோய்கள் உண்டாகும். கால்நடைகள் நோயால் பாதிக்கப் படும். விவசாயத்தில் மகசூல் பாதிக்கப்படும்.. இதன் காரணமாக பூமியின் பசுமை நமக்கு கொடுக்கும் சுகமானது கனவாக போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதை தடுக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தல் மிகவும் அவசியமாகிறது.

சனி, 5 நவம்பர், 2011

 
அன்பு..
 
 
 
 
 எல்லோருக்கும் பிடித்த ,எல்லோரையும் கவரக்கூடிய ஒரு அற்புதமான உணர்வு....அன்பான வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் வெகு விரைவில் எதிராளியிடம் ஐக்கியமாக முடியும்.அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம்,காதல் ,நேசம்,,கருணை இப்படி பல பரிணாமங்கள் உள்ளது.
அனைத்து விதமான உணர்வுகளிலும் தலை சிறந்தது அடுத்தவர்கள் மேல் நாம் காட்டும் பரிவு தான்...அன்பு என்பது மகிழ்ச்சியாக
இருப்பது மட்டும் கிடையாது..அது... ஆழமான அதே சமயத்தில் அழகான வலியும் கூட...
அன்பு நிறைந்த உள்ளத்தில் பொறாமை இருப்பதில்லை.இறுமாப்பு இருக்காது..சினம் கொள்ளாது.அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காது.சாந்தம் குடியிருக்கும்.அன்பை வெளிபடுத்தும் இதயத்திற்கு ஏழை ,பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க தெரியாது.
அ‌ன்பு அனை‌த்தையு‌ம் பொறு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம், அ‌ன்பு அனை‌த்தையு‌ம் ந‌ம்பு‌ம், அ‌ன்பு எத‌ற்கு‌ம் அடிப‌ணியு‌ம்.எதையும் அன்புடன் கூறும் போது,அதற்கு நல்ல பலன் இருக்கும்..அன்பு செய்வோம் .........:):):)

வியாழன், 3 நவம்பர், 2011

கண்ணீர்...
 
 
 
  கண்ணீர் பெரும்பாலும் நம் வேதனைகளையும் ,வலியையும் வெளிபடுத்துவதன் அறிகுறி என நினைக்கிறோம்.ஆனால் எந்த ஒரு உணர்வு அதிகமானாலும் கண்களில் கண்ணீர் வரும் என்பதை பலரும் அறிவதில்லை...
நம் வாழ்வில்  , வலியை மட்டுமே அதிகமாக உணர்வதால் ,நாம் கண்ணீரை அதனுடன் பிணைத்து  விடுகிறோம்.ஆனால் மனம் மிகவும் அமைதியாகவோ அல்லது ஆனந்தமாகவோ இருக்கும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதை நம்...மில் பலரும் அறிந்திருக்கவில்லை. அன்பு, ஆனந்தம் ,அமைதி இவற்றின் மூலம் கண்களில் கண்ணீர் வந்து ,அதை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால் வாழ்வின் ரகசியத்தை  இன்னும் முழுமையாக உணர வில்லை என்றே எனக்கு நினைக்க தோன்றுகிறது. அப்படி அனுபவிக்கும் பட்சத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் அதை தடுக்க முயலாதீர்கள் ...அனுபவியுங்கள் அந்த கண்ணீரை......ஆனந்தத்துடன்.......:):):)

செவ்வாய், 14 ஜூன், 2011

தஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்










ராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெரியகோயில் கட்ட பயன்படுத்தி இருக்க வேண்டும்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
தஞ்சைக்கு தெற்கு ,தென்மேற்குத் திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும்,வாய்க்கால்களாலும் சூழப்பட்டுள்ளன.எனவே அந்த திசைகளின் வழியாக மிகவும் கனமான பெரிய கற்பாறைகளை கொண்டு வருவது கடினமான காரியம் ஆகும்.தஞ்சையை விட சற்று உயரமான தென்மேற்கு திசைப்பகுதியே போக்குவரத்துக்கு ஏற்ற நில அமைப்பு கொண்டது.மேலும் தஞ்சைக்கு மிக அருகில் கற்பாறைகள் கிடைக்கும் இடமும் இந்த பகுதி தான்.
இரண்டாவது காரணம்......


தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் பாறைகள் எந்தவகையை சேர்ந்ததோ அதே வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்துக் குன்னாண்டார்கோயில் பகுதி ஆகும்.
கற்களே இல்லாத ஓர் இடத்திற்கு பல்லாயிரக்கணக்கான டன்கள் எடையுடைய கற்களை ,ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வந்து கட்டியுள்ளனர்.அக்காலத்தில் எந்த ஒரு தொழில் நுட்ப வசதிகளும் இல்லாதபோதும் பிரம்மாண்டமான பாறைகளை கொண்டு வந்தது மகத்தான சாதனையே.

இந்த தகவல் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் 'இராஜராஜேச்சரம்' புத்தகத்தில் உள்ளது.
இதே போன்று விஜயநகர பேரரசு காலத்தில் 18 ' நீளமும்,8 ' அகலமும் ,12 ' உயரமும் உடைய நந்தியை வைத்ததும் மிகப் பெரிய சாதனையே.











இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கி.பி. 750 இல் சோழ நாட்டில் நந்திபுரத்து ஆயிரத்தளி என்னும் ஊரில் ஆயிரம் லிங்கங்களை பிரதிட்டை செய்து ஓர் ஆலயம் கட்டினான்.பின்பு அந்த ஆலயம் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.அழிக்கப்பட்ட அந்த ஆலயம் இருந்த பண்டைய நந்திபுரம் என்னும் பேரூர் தற்போது தஞ்சைக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை,செங்கமேடு,இரட்டைக்கோயில்,ஆவிக்கரை என்னும் சிற்றூர்களாக மாறி விட்டன.
இரண்டாம் சரபோஜி மன்னர் வீரசிங்கம் பேட்டையிலிருந்து புதையுண்டு கிடந்த 108 சிவலிங்கங்களை எடுத்து வந்து 1801 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாளில் தஞ்சை கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பிரதிட்டை செய்தார்.

.பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப் பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல் மாலிக்கபூரின் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை காண முடியவில்லை . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்பது வரலாற்று உண்மை .

ராஜராஜன் இலங்கையை முழுதும் வென்றான்.அதனால் அவனுக்கு 'சிங்களாந்தகன்' என்ற பெயர் உண்டு.இலங்கைக்கு  மும்முடி சோழமண்டலம் என்று பெயரிட்டான்.தஞ்சை பெரியகோயில் வழிபாட்டிற்கு இலங்கையிலும் நிலம் கொடுக்கப்பட்டது.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....







தமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே.அவர்களை சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் ,சங்க காலச் சோழர்,பிற்காலச் சோழர் என்று மூன்று வகையினராக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்து உள்ளனர்.


சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்

சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள் பற்றி கலிங்கத்துபரணி,மூவருலா,மற்றும் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மனு, சிபி இவர்களின்  சரித்திர செய்திகள் சங்க நூல்களில் உள்ளன.
இவர்களை தொடர்ந்து ககுத்தன்,துந்துமாறன்,முசுகுந்தன்,வல்லபன்,துஷ்யந்தன்,பரதன்,வீரசேனன்,சித்ராசுரன்,என்று மேலும் பலர் ஆண்ட இம்மண்ணில் கவேரன் என்பவன் காவிரியின் ஓட்டத்தை சோழ மண்ணிற்கு உருவாக்கி கொடுத்தவன்.
இவர்களுக்கு பின் புலிகேசி,சமுத்ரஜித் ,வசு,பெருநற்கிள்ளி,மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்டமண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன்.இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன்.காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன்.இவன் காலம் கி. மு. 260  - 220 .
இவனை தொடர்ந்து கோச்செங்கணான்,கிள்ளிவளவன் ,மணிமுடிசோழன்,மற்றும் பலர் ஆண்டனர்.

சங்ககாலச் சோழர்கள்

இவர்களுள் கிள்ளிவளவன்,கோப்பெரும்  சோழன்,நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி,சோழன் செங்கணான், ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களாக விளங்கினர். சங்ககால சோழர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக தெரிகிறது.

கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை  பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது.குறிப்பாக கி.பி 250  முதல் கி.பி. 575  வரை உள்ள 300  ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர்.அக்காலகட்டத்தில்  வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் ,அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர்.களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர்.
சோழர்கள் களப்பிரர்களாலும் ,பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. 

சனி, 5 பிப்ரவரி, 2011

ஊழல் இடையே நான் கண்ட நேர்மை....

ஊழல்,திருட்டு,பொய்,பிறர் சொத்தை அபகரித்தல் ,இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு செய்தி நம் காதுக்கு வருகிறது.குறிப்பாக ஊழல்.இவையெல்லாம் என்ன என்றே தெரியாமல் அறியா பருவத்தில் நேர்மை ,ஒழுக்கம் இவற்றை மட்டும் பள்ளிகளில் கற்று வரும் நாம் வெளியே வந்ததும் ,நம்மை வழி நடத்தும் இந்த சமுதாயம் இதற்கு எதிர்மறையாக உள்ளது என்பதை தெரிந்து கொள்கிறோம்.
ஊழல்,ஊழல்,ஊழல்.......
முன்பெல்லாம் முறையற்ற வகையில் காரியம் நடக்க லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது.ஆனால் இப்போது நமது காரியம் சரியான முறையில் நடைபெறவேண்டும் என்றால் அதற்கும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நியதி உருவாகி விட்டது.
ஒரு சாதாரண வேலையில் இருக்கும் அலுவலர் லஞ்சம் வாங்கினால் ,அவரை உடனே கைது செய்யும் நம் நாட்டு சட்டம் ,பல கோடிகளை சுருட்டுபவர்களை விட்டு விடுகிறது.ஒரு நாடு  நன்றாக இருக்க ,தலைமை நன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
அதுவே சரியில்லை என்றால் நாடு எங்ஙனம் சிறக்கும்?
நேர்மை என்றால் என்ன என்று கேட்கும் நிலை இன்று உருவாகி விட்டது.நேர்மையான தொழிலாளியையும் ,அதிகாரியையும் இன்று காண்பது மிகவும் அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த நம் தமிழகத்தில், தன் பணியில் சிறிதும் நேர்மை தவறாத ,'என் கடன் பணி செய்து கிடப்பதே 'என்ற வரிகளுக்கு சரியான உதாரணமாய் வாழ்ந்த,இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ,நான் சந்தித்த ஒரு ஓய்வு பெற்ற பெரியவரை பற்றி சில வரிகள் பகிர விரும்புகிறேன்.மின்சார வாரிய பொறியாளரான அவர் வேறு ஒரு நகரத்திற்கு ,மாறுதல் பெற்று அவ்வூரின் நகராட்சி பொறியாளராக சிறப்பு நியமனத்தில் மூன்று வருடம் பணி செய்ய வந்தார்.அதுவரை லஞ்சத்தில் ஊறி கிடந்த அந்த நகராட்சிக்கு புதிய பொறுப்பில் வந்த நம் பெரியவரை மரியாதை நிமித்தம் சந்திக்க 'அன்பளிப்புடன்' வந்த ஊர் பெரியமனிதர்களும்,அரசியல்புள்ளிகளும் ,அவர் கண்டிப்புடன் மறுத்ததை அதிசயமாக பார்த்து திரும்பினர்.
அதன்பிறகு துரிதகதியில் அவர் செயல்பட்ட விதம் காரணமாக ஒரே ஆண்டில் அவ்வூரில் நிலுவையில் இருந்த அனைத்து மின்வேலைகளும் முடிவு பெற்று ,ஒரு கட்டத்தில் அந்நகரில் அனைத்து தெருவிளக்குகளும் எரியும் நிலையை உருவாக்கினார்.புது இணைப்பு வாங்குபவர்கள் வரிசைப்படி மிகவும் விரைவாக இணைப்பு பெற்றனர் எந்த வித செலவும் (லஞ்சம்) இல்லாமல்.கட்சி பாகுபாடு இன்றி அவர் செயல்பட்டதால் ,அவருடைய மூன்று வருட பணி முடிந்த போது மேலும் இரண்டு வருடம் பணி நீடிப்பு கிடைத்தது.எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் அவர்கள் குறையை உடனே நீக்கிவிடுவார்.
ஆனால் அந்த ஐந்து வருட காலத்தில் அவர் சந்தித்த தொல்லைகள் ஏராளம்.கொலை மிரட்டல் கடிதங்கள் பல வந்தன.அவர் பெண்களை கடத்தி விற்க்கபோவதாகவும்,அவரை மணல் லாரி ஏற்றி கொள்ளபோவதாகவும் தொல்லை கொடுத்தனர்.இரவில் நடக்கும் மின்சார திருட்டுகளை கண்டு பிடித்து ஒழித்தால் பல பெரும்புள்ளிகளுடன் பகை வளர்ந்தாலும் ,நியாயமான முறையில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கி அவர்களின் அன்பையும் பெற்றார்.
இன்றும் அவருடைய ஐந்து ஆண்டு கால பணியை 'பொற்காலம்' என்று கூறி புகழும் பலரை நான் காண்கிறேன்.இன்றும் அவரை அவ்வூரில் உள்ள மக்கள்  நல்ல மரியாதை கொடுத்து அன்புடன் நடத்துகின்றனர். 
இவ்வளவு நேர்மையுடன் எந்தவித பயமும் இல்லாமல் ,மிகவும் துணிச்சலுடன் பணியாற்றிய அவரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்த எந்த அரசியல்வாதியும் வரவில்லை.
இப்படி பட்டவர்களை ஊக்கப்படுத்தினால் தானே நாமும் நேர்மையுடன் பணி செய்யலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்.ஊழல் நிறைந்த இந்த உலகில் நேர்மைக்கு ஏது மதிப்பு.....

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மூணாறு




தமிழகத்திற்கு அருகில் கேரளாவை சேர்ந்த மூணாறு, தேயிலை தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் மிகவும் அழகிய நகரம்.  பச்சை போர்வை போர்த்தியது போல் தோன்றும் அழகிய தேயிலை தோட்டங்களும், கண்களை கவரும் பசுமை நிறைந்த மரங்களும் ,வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையும் கண்கொள்ளா காட்சி.
தமிழ்நாடு ,கேரளா எல்லையில் அமைந்துள்ள இந்த அழகிய மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.தமிழகத்தில் போடிநாயக்கனூர் என்ற ஊரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.போடிமெட்டு என்ற இடத்தில தமிழக ,கேரளா எல்லை இருக்கிறது.
மூணாறில் பார்க்கவேண்டிய சில இடங்கள் , மாட்டுப்பட்டி அணை ,  ராஜமலை (இங்கு அபூர்வ வகை மலை ஆடுகளை காணலாம்), ஆனைமுடி ,கொளுக்குமலை தேயிலை தோட்டம்.
கொளுக்குமலை கடல் மட்டத்திலிருந்து 2175 மீட்டர் ( 7150 அடி ) உயரத்தில் உள்ள மிகவும் அழகிய இடம் .வழிநெடுகிலும் தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்த மலை உச்சியை அடைய தனியாருக்கு சொந்தமான ஜீப்புகள் உள்ளன.மிகவும் கரடுமுரடான அந்த பாதையில் ஜீப்புகளில் தான் பயணிக்க முடியும்.அதிகாலை 4 .30 மணிக்கு புறபட்டால் ஒருமணி நேரத்தில் அந்த இடத்தை அடையலாம்.5 .30 முதல் 7.30  வரை   அங்கே  காத்திருந்தால் ஆறு மணியளவில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம்.மூடுபனி இல்லாமல் தெளிவாக இருந்தால் இது ஒரு அற்புதமான அனுபவம்.இந்த மலை தான் உலகிலேயே உயரமான தேயிலை தோட்டம் அமைந்த மலை.இதன் ஒருபுறம் தேனி,கம்பமும் ,மறுபுறத்தில் கேரளாவையும் காணலாம்.





















வெள்ளி, 21 ஜனவரி, 2011

தஞ்சை பெரிய கோயில் - சில தகவல்கள்...






கி .பி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த போது நிசும்பசூதனி என்ற தேவி கோயில் ஒன்றினை தோற்றுவித்தான்.அவன் எடுத்த திருமேனி தற்போது தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வடபத்ரகாளிகோயில் என்னும் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் திகழ்கின்றது.
தஞ்சையில் சோழர் ஆட்சி மலர்ந்த போதே இத்தேவியின் கோயிலும் எழுந்ததாக வரலாறு கூறுகிறது.


பெரியகோவிலை சுற்றியுள்ள திருமதில் ராஜராஜனின் சேனாதிபதி கிருஷ்ணன் ராமனால் கட்டப்பட்டது.
கோயில்,கீழே இரண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு அதன் மீது உயரமாக அமைக்கப்பட்டது.இரு சுவர்களின் இடைவெளியில் இரண்டு அடுக்குகளில் நாம் நடந்து செல்லலாம்.ஒன்றில் நாட்டிய கரணச் சிற்பங்களும் ,மற்றொன்றில் ஓவியங்களும் உள்ளன.

ராஜராஜனின் ஆட்சிப் பரப்பு சோழ நாடு,பாண்டிநாடு,தொண்டைநாடு,கொங்குநாடு,சேரநாடு என்று தமிழ்நாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்ததோடு, குடமலைநாடு (குடகு பகுதி),கங்கபாடி (கர்நாடகத்தின் தென்பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தை ஒட்டிய பகுதி), நுளம்பபாடி(கர்நாடகத்தின் ஒரு பகுதி மற்றும் ஆந்திரத்தின் பெல்லாரி மாவட்டம்),தடிகைபாடி (மைசூர் பகுதி),வேங்கைநாடு (கிருஷ்ணா கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட சாளுக்கியநாடு ), கலிங்க நாடு (ஒரிஸ்ஸா ),சித்புலிநாடு (நெல்லூர் பகுதி ),பழந்தீவு பன்னீராயிரம் (சேர நாட்டிற்கு தென் மேற்கே அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகள்), ஈழத்தில் ஒரு பகுதி ஆகிய நாடுகளிலும் பரவி இருந்தது.

ராஜராஜன் தஞ்சை பெரிய கோயில் இறைவனுக்குத் தண்ணீரைக் கொட்டுவதுபோல் , இலட்சக்கணக்கான முத்துக்களைக் கொட்டி வழிபட்டான் .அவை சத்யாசிரியனையும் ,பாண்டியரையும்,சேரரையும் வெற்றி கண்டு கொண்டுவந்தவை.

வியாழன், 13 ஜனவரி, 2011

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ,அனைவருக்கும்  என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

புதன், 22 டிசம்பர், 2010

ஆருத்ரா தரிசன விழா




பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

பூலோக கைலாசம் என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் மூலவரே சபையை விட்டு வெளியில் வந்து அன்னை சிவகாமியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் .இந்த அற்புதமான காட்சியை வேறு எங்கும் காணமுடியாத ஓர் அறிய காட்சி ஆகும்.தேர் நான்கு வீதிகளையும் வலம்வந்து முடிந்ததும் மாலை ஏழு மணிக்கு பிறகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ மூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர்.
மறுநாள் , அதாவது திருவாதிரை நட்சத்திரத்தன்று அதிகாலையில் மகா அபிஷேகமும் ,அதன் பிறகு ஆபரண அலங்காரமும் , லட்ச்சார்ச்சனையும் நடைபெறும்.அன்று மதியம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.
தங்க ,வைர  ஆபரணங்கள் ஜொலிக்க ,அலங்காரம் செய்யப்பட்ட நடராஜ மூர்த்தியும்,சிவகாமி அம்மையும் வாத்திய கோஷங்களும்,வேத மந்திரங்களும் ஓத ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து முன்னும் ,பின்னுமாக ஆனந்த நடனமிட்ட வண்ணம் சிற்சபைக்கு செல்கின்றனர்.இந்த தரிசனக்காட்சியையே ஆருத்ரா தரிசனம் என்பர்.
இந்த அற்புதக் காட்சியைக் காண தமிழகத்திலிருந்து மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள்.வாழ்வில் ஒருமுறையாவது இந்த தரிசன காட்சியை பக்தர்கள் கண்டு களிக்க வேண்டும்.

சனி, 18 டிசம்பர், 2010

எஸ் .எம் .எஸ் சிரிப்புகள்

1 .துறை தலைவர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூங்கினா போதும்...!
மாணவன் - வீட்லையா , காலேஜிலையா சார்...
துறை தலைவர் - ??????

2.கிரிக்கெட் ஒரு பித்தலாட்ட விளையாட்டு ....
* கைல பால் வச்சிக்கிட்டு நோ பால்னு சொல்லுவாங்க .

* ஓவர்னு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போடுவாங்க.

*ஆல் அவுட்னு சொல்லுவாங்க .ஆனா பத்து பேருதான் அவுட் ஆகி இருப்பாங்க .

*ஒரு ஓவருக்கு ஆறு பால்னு சொல்லிட்டு ஒரு பால் தான் வச்சிருப்பாங்க .

*அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு விளையாட்டு வீரர் அவுட்டாம் .அப்ப ரெண்டு கைய தூக்கினா இருவர் தானே அவுட்.ஆனா சிக்ஸ்னு சொல்லுறாங்க.

என்ன விளையாட்டு இது....

3 . தி .மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்ப்பட போகும் மாற்றங்கள் ...
*தமிழ்நாடு 'கலைஞர் நாடு' என்று பெயரிடப்படும்.
*தமிழ்மொழி 'கனிமொழி' என்று மாறும்.
*மதுரை 'அழகிரி இல்லம்' என பெயர் மாற்றம் செய்யப்படும்.
*ஸ்டாலின் பிறந்த தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்.

புதன், 15 செப்டம்பர், 2010

நம்பிக்கை மலர்கள்

"நம்பிக்கை "
என் இனிய நண்பர்களே !!!!
சிதம்பரதிலிருந்து பிச்சாவரம் செல்லும் வழியில் கிள்ளை என்றொரு சின்னஞ்சிறு கிராமத்தில் இந்த" நம்பிக்கை " இல்லம் இருக்கிறது.இது ஒரு பெண்குழந்தைகள் காப்பகம்.இங்கு 30 பெண்குழந்தைகள் உள்ளனர். 9 முதல் 16 வயது சிறுமிகள் இந்த காப்பகத்தில் உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் சுனாமியில் பெற்றோரை இழந்தவர்கள் .மற்றவர்களும் ஏதோ ஒருவகையில் ஆதரவற்ற நிலையில் அந்த காப்பகத்தில் உள்ளனர்.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த சிறுமிகளை மூன்று வருடங்களுக்கு தத்து எடுத்து அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு கொடுத்து வந்தது.வருடத்திற்கு இரண்டு முறை உடுத்த ஆடையும் அளித்தது.அவர்கள் தங்குவதற்கு இரண்டு  ஏக்கர் பரப்பளவில் இந்த நம்பிக்கை இல்லத்தை கட்டி கொடுத்தது.அந்த சிறுமிகள் சுனாமிக்கு முன் படித்த பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வசதியும் செய்து கொடுத்தது.மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனம் தங்கள் சேவையை ரத்து செய்தபோது இல்லத்தின் காப்பாளர் கேட்டுகொண்டதற்கு இணங்கி அந்நிறுவனம் தங்கள் சேவையை மேலும் இரண்டு வருடங்கள் நீடித்தது.தற்போது அந்நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டது.
தற்சமயம் அப்பிள்ளைகளின்  மூன்று வேளை சாப்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

சென்ற முறை நான் அந்த காப்பகத்திற்கு சென்ற போது அப்பிள்ளைகளின்  இந்த நிலை எனக்கு தெரிய வந்த போது மிகவும் வேதனை அடைந்தேன்.இல்ல காப்பாளரிடம் என்னால் முடிந்த உதவி செய்வதாக கூறிவிட்டு வந்தேன்.
என் நண்பர்களாகிய நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால் அக்குழந்தைகளுக்கு உதவுங்கள்.
முகவரி:
"நம்பிக்கை",
கிள்ளை,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம்.

நன்றி.

Pit