குங்குமம் தோழியில் முகம் தெரியாத உறவுகள்!
வெள்ளக் களத்தில் கடலூர் கண்மணிகள்
வெள்ளத்தின் ேகார தாண்டவத்தில் எல்லாவற்றையும் இழந்து நின்றவர்களின் கண்களில் நிறைந்து வழிந்த அந்த பயம்... அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை ேதாய்ந்த முகம்... தொலைந்த உறவுகளைத் தேடி அலைந்த மனம்... இந்த இழப்பின் வலி மனித மனங்களுள் புதைந்து கிடந்த நேசத்தை விழித்து எழ வைத்துள்ளது. சுனாமி, தானே புயல், சென்ற மாத வெள்ளம், இந்த மாத வெள்ளம் என இயற்கையின் கோபத்தை எல்லாம் தன் மடியிலேயே தொடர்ந்து தாங்கி வருகிறது கடலூர். இப்பகுதியில் கண் துஞ்சாது களப்பணியாற்றிய தோழிகள் சிலரோடு பேசினோம்...
மலர்விழி ரமேஷ்
சிதம்பரத்தில் வாழும் மலர்விழி புகைப்படக் கலைஞரும் கூட. ரூ.50 லட்சத்துக்கும் மேல் நிவாரணப் பொருட்களைத் திரட்டி வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் முறையாக விநியோகித்து வருகிறார். ‘‘உதவும் குணம் எங்களது வீட்டில் இருந்தே தொடங்கியது. மாமனார் மருத்துவர், கணவரும் மருத்துவர். ஒவ்வொரு மாதத்திலும் இறுதி ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். வெள்ளப் பாதிப்புகள் தொடங்கிய உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளின் படங்களை ஃபேஸ்புக்கில் ஏற்றினேன். புகைப்பட நண்பர்கள் குழுவாக உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். கடலோரத்தில் இருந்த தில்லை என்ற கிராமத்தில் வீடுகள் இருந்த சுவடே காணாமல் போனது. ெசன்னைக்கு முன்பாகவே கடலூர் கிராமங்கள் வெள்ளத்தில் வீடுகளை இழந்தன. பின்தங்கிய கிராமங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
கடலூர் பகுதி கிராமங்களில் எந்த வெள்ளத்தாலும் அடித்துச் செல்ல முடியாத அளவுக்கு சாதிப் பிரச்னையும் வலுவாக இருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி நிவாரணம் தேவைப்படும் மக்களை கண்டறிந்து பொருட்களை வழங்கினோம். கடலோர கிராமங்களில் சமைத்து உண்ணவும் வழியற்று வாடிய மக்களுக்காக ‘நம்பிக்கை இல்லம்’ பெண்கள் இணைந்து சமைத்துத் தந்தனர். இன்னும் பெட்ஷீட் போன்ற உதவிப் பொருட்கள் தேவைப்படுகிறது. வெள்ளத்தில் வாழ்க்கையை இழந்து நிற்பவர்களுக்கு நாம் செய்யும் உதவி சிறு துளிதான்’’ என்று நெகிழ்கிறார் மலர்விழி.